நெல்லையில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய எஸ்டிபிஐ கட்சியினர்; பொதுமக்கள் பாராட்டு..

நெல்லையில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே பழங்கால மரமொன்று ஒடிந்து விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்திய எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.நெல்லை அம்பை தொகுதி பிரதான சாலை வெள்ளங்குளி சுடலை மாடசுவாமி கோவில் எதிர்புறம் கனமழையின் காரணமாக பழங்கால மரமொன்று மின்கம்பம் மேல் ஒடிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. தகவலறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டனர். உடனடியாக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம் கே பீர் மஸ்தான் தலைமையில் கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பழங்காலமரம் என்பதால் மரத்தை அப்புறப்படுத்த மிகவும் சிரமம் ஏற்பட்டது. சிரமத்தை கடுகளவும் பொருட்படுத்தாமல், எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பொங்கல் என்பதால் மக்களின் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. விரைவாக எஸ்டிபிஐ கட்சியின் மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தியதால் பொங்கல் திருநாளை கொண்டாடிய அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினரை தீயணைப்பு துறை காவல்துறை மற்றும் மின்சார துறையினர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்