செயற்கை பானத்துக்கு சவாலாக “நீரா” பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி – தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தென்னை சாகுபடியில் மணிமகுடமாய் விளங்கி வருகிறது. போதிய மழையின்மை மற்றும் பெரும்பான்மையான நீர் நிலைகள் அழிக்கப்பட்டதின் காரணமாக விளைச்சலில் சரிவு ஏற்பட்டு தேங்காயின் விலை உயர்ந்து விட்டது.

தற்போது தென்னையில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கிய செய்தி தென்னை விவசாயிகளின் மத்தியில் மகிழ்ச்சி அளித்துள்ளது.

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தினை இறக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும் என்றும் செயற்கை பானத்துக்கு சவாலாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

“நீரா” என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, உடல்நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கையான ஊட்டச்சத்து பானத்தில் வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.

“நீரா” பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் இருக்க தென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதன் மூலம் நீண்டநாள் சேமித்து பயன்படுத்த முடிகிறது.

அதே வேளையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மழை பொய்த்து போய் நீர் நிலைகள் வற்றிப் போன நிலையில், இது போன்ற முயற்ச்சிகள் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் நீர் நிலைகள் இன்றி வறண்டு போயிருக்கும் பூமியில் “நீரா” பானம் நீர்த்து போய் விடுமோ… என்ற அச்சத்தையும் தென்னை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.