Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அலட்சியமாக செயல்படும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மீது கா.நவாஸ் கனி கண்டனம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

அலட்சியமாக செயல்படும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மீது கா.நவாஸ் கனி கண்டனம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

by ஆசிரியர்

அலட்சியமாக செயல்படும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மீது கா.நவாஸ் கனி கண்டனம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுப்பியுள்ளார்.  இது குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா நோய் தொற்று முடிவு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அலட்சியத்தால் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் துபாயிலிருந்து வந்த சென்னையில் வசிக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஜமால், 70. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது வீட்டில் அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

ஏப்ரல் 2 அன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர் உயிரிழந்தார். ஆனால், நேற்று (04/04/2020)  இரவு வரை முடிவு வராதது மிகப்பெரிய தாமதம். அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற அறிவிப்பை அரசு தாமதமாக இன்று (05/04/2020) வெளியிட்டுள்ளது. சந்தேகிக்கப்பட்டு பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்த நிலையில் முடிவு வருவதற்கு முன்பே, உடல்  நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறி உடலை ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகத்தின் மிகப் பெரிய தவறு.

தற்போது நோய் தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் அவரது உடலடக்கத்தில் உடல் நலக்குறைவால் இறந்தவர் என எதார்த்தமாக பங்கேற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அனைவரும் தற்போது பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இம்முடிவை உடனடியாக அறிவித்திருந்தால் இது போன்ற அச்சம் ஏற்பட்டிருக்காது. முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாத்து முடிவு வந்ததற்கு பிறகு ஒப்படைத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப் பட்டிருக்கும்.

இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்து இருப்பர். அதனை செய்யாமல், மிகுந்த அலட்சியத்துடன் இப்பேரிடர் கால கட்டத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவறு செய்துள்ளது.

கொரோனா நோய் தொற்று விஷயத்தில் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கும் பொழுது மெத்தனப் போக்குடன் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று பரிசோதனை முடிவுகளை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.

பொதுவாக இந்த பரிசோதனைகளில் உரிய வெளிப்படைத்தன்மை இல்லாததாக பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். கொரோனா நோய் தொற்று பரிசோதனையில் தாமதத்தை தவிர்த்து, வெளிப்படைத் தன்மையுடன் அரசு நடந்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் இருக்கும் நபர் இறந்தால் முடிவுகளை உடனடியாக அறிவித்த பின்பே அவரது உடலை ஒப்படைக்க வேண்டும்.

இது மிகப்பெரிய அலட்சியம். இந்த அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் இதற்காக நாம் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!