
இராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகளவில் நடக்கும் திருட்டு, வழிப்பறி பல குற்றச்சம்பவங்களை தடுக்க மக்கள் பாதை சார்பாக கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் கற்பூரவலசை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களை தொடர்ந்து ஆடுகள் அதிகளவில் திருடு போகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கின்போது 4 மாத இடைவெளியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோய்விட்டது. கற்பூரவலசை கிராமத்தில் மட்டும் இந்த வருடத்தில் 25க்கு மேலான ஆடுகள் திருடுபோய்விட்டது . இதனை தொடர்ந்து கற்பூரவலசை இரெகுநாதபுரம் மேலூர், குண்டூரணி, இரெகுநாதபுரம் மேலூர் காலணி, சங்கந்தியான்வலசை, வீரவேல்வலசை, சீலிவலசை, கோழியன்வலசை(மருதுநகர்) சுற்றியுள்ள பகுதிகளிலும் இதே நிலை தொடருகிறது.
இந்தப் பகுதிகளில் ஆரம்ப காலம் தொடர்ந்து அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் பல நடந்துகொண்டிருக்கிறது. குண்டூரணி பகுதியில் கொள்ளை சம்பவங்கள் மட்டுமல்லாது கொலை சம்பவமும் ஏற்கெனவே நடந்திருப்பதால் மக்கள் அதனை கண்டு பயந்து அதன் வழியாக அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
தற்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பாக சீலிவலசை பகுதியில் திரு. சதாஸ்கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் இரவு சரியாக 12மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு புதிய மின்மோட்டார், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் பலவற்றையும் திருடிச்சென்றுவிட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு வயதான விவசாயி ஒருவரின் மேலூர் பகுதியில் உள்ள தோப்பில் ஓட்டு கொட்டகையில் இருந்த கோடாரி, மண்வெட்டி,அறிவாள், விலை மதிப்புள்ள நீளமான கயிறு, வாளி ஆகிய பொருட்களை திருடிச் சென்றதால் அந்த வயதான முதியவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.அதனைத் தொடர்ந்து 4நாட்களுக்கு பிறகு இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடும் பொழுது ஆட்டு உரிமையாளர் அதனைக் கண்டு கூச்சலிட்டார். பின்னர் கிராம மக்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். 25.07.2020 அன்று நள்ளிரவில் கற்பூரவலசை கிராமத்தில் குடியிருக்கும் வீரபத்திரன் -அழகம்மாள் என்பவரின் ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.இந்த பகுதியில் ஒவ்வொரு வருடமும் சுமார் 25முதல் 35 ஆடுகள் திருடுபோய்விடுகிறது. அதே நேரத்தில் கிராம மக்களும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க முன்வராமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இவ்வாறு திருட்டு நிகழ்வுகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் இதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்கனவே கொலை, கொள்ளை, நகை, அலைபேசி முதலான வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுதும் இதே நிலை நீடித்து வருகிறது. பல்வேறு திருட்டு சம்பவங்களின்போது மர்ம நபர்களை கிராம மக்கள் பிடிக்க முயன்ற போதும் தோல்வியில் முடிவடைகிறது.
திருட்டு சம்பவங்களில் காலை முதல் இரவு வரை அதிகளவில் மர்ம நபர்கள் ஈடுபடுவதால் மக்கள் எந்நேரமும் பீதியில் உள்ளனர்.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் அன்றாடம் தங்கள் உழைப்பை கருத்தில் கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள். இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல்,வேலையின்மை என பல்வேறு பிரச்சனை காரணமாக முடங்கியிருக்கும் கிராம மக்கள் இவ்வேளையில் திருட்டு பயம் காணப்படுவதாலும் மனமுடைந்துள்ளனர். எனவே இம்மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு அவ்வப்போது மதியம், மாலை, இரவு வேளைகளில் காவலர்களைக் கொண்டு திருடுபோவதை தடுக்க வழிவகைகள் செய்யுமாறும் , எவ்வித அசம்பாவித குற்றச்சம்பவ நிகழ்வுகளும் இனிமேல் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கற்பூரவலசை கிராமம் சார்பாகவும் மற்றும் மக்கள்பாதை சார்பாகவும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.கோரிக்கை மனுவை இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார், இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ், தன்னார்வலர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.கோரிக்கை மனுவிற்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.