2019 லோக்சபா தேர்தலில் அதிமுக நிச்சயம் வெல்லும் – அமைச்சர் மணிகண்டன் ஆருடம் ..

தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இராமநாதபுரம் அருகே பிரப்பன் வலசையில் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினால் செந்தில் பாலாஜி அடையாளம் காணப்பட்டார். அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்துவிட்டு டிடிவி தினகரனிடம் சென்று பதவிகளை இழந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இன்று இணைந்துள்ளார். அதிமுக., வை எதிர்த்து யார் கட்சி துவங்கினாலும் அழிந்து விடுவர். என்றுமே ஒரு எஃகு கோட்டையாக உள்ள அதிமுக., வில் ஒரு செங்கலை கூட எவராலும் உருவி பார்க்க முடியாது. 2019 லோக் சபா தேர்தலில் அதிமுக மிக பெரிய வெற்றி பெறும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் கிடையாது. எந் நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். டிடிவி தினகரன் வலுவிழந்து எதுவுமின்றி தனி மரமாக நிற்க போகிறார் . இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன், கடலாடி ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன், சட்டமன்ற தொகுதி முன்னாள் இ ணை செயலாளர் தஞ்சி சுரேஷ், மண்டபம் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர், என் மனம் கொண்டான் ஊராட்சி செயலர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கள.ராஜேந்திரன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சீனி காதர் முகைதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்