Home செய்திகள் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

by mohan

மதுரையில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அதன் நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.இதுகுறித்து மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனத்தலைவர் முருகவேல் ராஜன் கூறியதாவது;

மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசரகதியில் குறுகிய மத அடிப்படைவாத உள் நோக்கில் எதிர்க்கட்சிகளின் நியாயமான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தேசத்தின் ஆன்மாவை சாகடிக்கிற வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்கள் குறிப்பாக மதச்சார்பற்ற இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள், வெகுமக்கள் இச்சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனையே இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அலை உணர்த்துகிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது மத்திய அரசின் உத்தரவுப்படி காவல்துறை அடக்குமுறை அராஜக போக்கை கையாண்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. மாணவர்களின் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இப் போராட்டமானது வடகிழக்கு இந்தியா தொடங்கி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி மக்கள் எதிர்வினை ஆற்றும் நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் அபாயகரமாக உள்ளது. இந்தியாவில் இந்துக்கள் அல்லாத குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்ற நோக்கத்தில் இது போன்ற கருப்புச் சட்டங்களை பா.ஜ.க அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளன மதவாத குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவின் மூலம் உண்டாக்கப்படும் புதிய சட்டம் இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கில் அந்நிய நாட்டினர் என்று முத்திரை குத்தப்பட்டு நாடுகடத்தப்படும் கொடுமையை அரங்கேற்ற பயன்படும், அல்லது பயன்படுத்தப்படும் என்பது உண்மை. ஆயினும் தமிழர்களாகிய நாம் இந்த சட்டத்தால் தமிழர்கள் என்பதாலேயே இந்த சட்டத்தின் நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இலங்கை தமிழர்கள் இங்கேயே 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இங்குள்ள தமிழர்களோடு திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு நம்மோடு ஒன்றோடு ஒன்றாக கலந்து ரத்தமும் சதையுமாக ஆகிவிட்டார்கள். ஆனால் தமிழர்களை ஒடுக்கும் மனப்பான்மை கொண்ட மத்திய அரசு இந்த ஆள் தூக்கிச் சட்டத்தை பயன்படுத்தி சுமார் நாலரை லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் நாடு கடத்தி இலங்கைக்கு அனுப்ப போகிறது. இது கொடுமை அல்லவா இந்த மதவெறி சட்டத்தால் மீண்டும் இலங்கைக்கு தூக்கி எறியப்பட உள்ளார்கள். இது தமிழர்களின் இதயத்தில் வேல் கொண்டு தாக்குவது போல் உள்ளது. ஆகவே மக்கள் விடுதலை கட்சி மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது. இச்சட்ட மசோதாவை எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளோடும், இவ்விஷயத்தில் மக்கள் விடுதலை கட்சி ஒன்றுபட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி மத வேற்றுமை இல்லாத சமதர்ம சமுதாயம் என்பது எங்களது லட்சியம் ஆகும். மக்கள் விடுதலை கட்சியானது இச்சட்டத்திற்கு எதிராக களத்தில் போராடுவது என்று உறுதியோடு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இச்சட்டத்தால் நாட்டு மக்களிடையே ஜாதி,மத பூசல்கள் தலைதூக்கி பிரிவினை உணர்வு மேலோங்கும் என்பதனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அடியோடு முற்றாக, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இக்கருப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி எனது தலைமையில் மக்கள் விடுதலை கட்சி சார்பில், வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை கே.புதூர் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மக்கள் விடுதலை கட்சிகள் சார்பாக பங்கேற்க உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com