மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் 3 லாரிகளை சுங்கச்சாவடியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருமங்கலம் அருகே 800 மீட்டர் தொலைவில் கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.விதிகளுக்கு புறம்பாக இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ளதாக ஐந்து வருடங்களுக்கும் மேலாக கப்பலூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர்களும்,திருமங்கலம் பகுதி மக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் கோதுமை மாவு தொழிற்சாலைக்கு சென்ற மூன்று லாரிகளை சுங்கச்சாவடியினர் சிறை பிடித்தனர்.சுங்க கட்டணம் செலுத்தாமல் லாரிகளை விட முடியாது என்று சுங்கச்சாவடியினர் கூறியுள்ளனர்.உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று திருமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வந்தது.இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டதால் இதுகுறித்து தெரியாதவர்கள் உள்ளூர் வாகனங்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றனர்.இதனால் தினந்தோறும் சுங்கச்சாவடியில் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாவது தொடர்கதையாகி வருகிறது.கோதுமை மாவு தொழிற்சாலையினர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இடைக்கால தடை வாங்கி உள்ளனர்.இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது என்றும் அதனால் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தொழிற்சாலை சார்பாக வாதிட்டனர்.கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா சுங்கச்சாவடி க்கு சென்று சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களின் வாகனங்களும் இதேபோல நெருக்கடிக்கு ஆளாவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.தகவல் கிடைத்து திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சிவசக்தி போலீசாருடன் சென்று இரு தரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார்.திருமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.