Home செய்திகள் திருவில்லிபுத்தூரில் கலெக்டர் வந்த கார் சிறை பிடிக்கப்பட்டது…

திருவில்லிபுத்தூரில் கலெக்டர் வந்த கார் சிறை பிடிக்கப்பட்டது…

by mohan

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் செங்கல் சூளை தொழிலாளர்கள், கலெக்டர் வந்த காரை சிறை பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் செங்கல் உற்பத்தி தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் கிடைக்கும் மண் மூலமே இங்கு செங்கல் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மண் அள்ளுவது தடை செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மண் அல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு வருடமாக இந்தப்பகுதியில் மண் அள்ளுவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து, அனுமதிச் சீட்டு வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட கணிப்பு ஆய்வு அலுவலர் மதுமதி உட்பட வருவாய்துறை அதிகாரிகள், பொதுப்பணிதுறை அதிகாரிகள் அணைப்பகுதி, நீ்ர்நிலைகளை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தனர். நேற்று மாலை திருவண்ணாமலை சாலையில் கண்மாய்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த தகவலறிந்த, அந்தப்பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிலர், மாவட்ட கலெக்டர் வந்த வாகனத்தை மறித்து, காரின் முன்பு அமர்ந்து தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் காரை மறித்து, செங்கல் சூளை தொழிலாளர்கள் அமர்ந்திருக்கும் தகவல், பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. அங்கிருக்கும் செங்கல் சூளை தொழிலாளர்களும் திரண்டு வந்தனர். சிறிது நேரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, அதிகாரிகள் வந்த கார்களை எடுக்க முடியாதபடி சுற்றி வளைத்து, அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். செங்கல் சூளைகளுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மணல் அள்ள அனுமதி வழங்கினால் மட்டுமே, கார்கள் செல்ல அனுமதிப்போம் என்று கூறி குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்த காரை வழி மறித்து அமர்ந்தனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், தொழிலாளர்களிடம் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரமாக நீடித்த பதற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது. பின்னர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய செங்கல் சூளை தொழிலாளர்கள், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் தங்களது ரேசன் கார்டுகள், ஆதார் கார்டுகளையும் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாகவும், மிகப் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டாலும், அதிகாரிகள் மழைக்கால பணிகளை செய்ய வேண்டிய அவசியம் இருந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளை விடுவித்துவிட்டு, கலைந்து சென்றனர். ஆய்வு பணிகள் செய்ய வந்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை, செங்கல் சூளை தொழிலாளர்கள் 2 மணி நேரம் சிறைப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com