Home செய்திகள் மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா;ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்:-வைகோ அறிக்கை!

மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா;ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்:-வைகோ அறிக்கை!

by Askar

மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா;ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்:-வைகோ அறிக்கை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மே 6-ஆம் தேதி 27 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் இன்னொரு படிநிலை வளர்ச்சியாக, தமிழக அரசியல் வானில் மறுமலர்ச்சி திமுக இலட்சிய சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கட்டி நிர்மாணித்த இலட்சியக் கோட்டையை காக்கும் காவல் அரணாக தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா வழியில் பீடுநடை போடுகிறது.

திராவிட இயக்கம் ஏந்திப் பிடித்த கொள்கைக் கோட்பாடுகளான சமூக நீதி தழைக்கவும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27 ஆண்டுகளாக இடையறாது ஆதாயம் தேடாமல் அரசியல் களத்தில் தொண்டாற்றி வருகிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றவும், நதி நீர் உரிமைகள் பறிப்புக்கு எதிராகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் சமரசமின்றி போராடி வருகிறது.

தமிழகத்தை சீரழித்து வரும் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கு இலக்கை அடைய தொடர்ந்து அறப் போர்க்களத்தில் நிற்கின்ற இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாடு அறியும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனம் செய்த மாநில சுயாட்சி தத்துவம் நிலை பெறுவதற்கு தென்னகத்தில் வலுவாகக் குரல் எழுப்பும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக என்பதை வடபுலம் உணர்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை தகர்த்து, தமிழ் மொழி இன பண்பாட்டு மரபுகளைச் சிதைப்பதற்கு பரம வைரிகள் கங்கணம் கட்டி அலைகின்றனர்.

நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே கலாச்சாரம் என்று அனைத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் சனாதன சக்திகளை இந்த மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோளோடு தோள் சேர்ந்து களத்தில் நிற்கிறது மறுமலர்ச்சி திமுக.

அதனைக் கருத்தில் கொண்டுதான் தொலைநோக்குப் பார்வையுடன் கழகம் அரசியல் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகளை நெஞ்சிலே தாங்கி, பூமிப்பந்தில் வாழ்கிற தமிழர் நலன் பேணும் இயக்கமாக கழகம் திகழ்கிறது.

நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இழந்த தாயகத்தை மீட்கவும், மாவீரர் திலகம் பிரபாகரன் இலட்சிய தாகமான தமிழீழம் மலரவும், உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொது வாக்கெடுப்பு ஐநா மன்றத்தின் அங்கீகாரத்தோடு வெற்றிகரமாக நடைபெறவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குரல் எழுப்பும்.

கொரோனா கொடிய பேரிடர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏதுமற்ற ஏழை எளிய மக்களுக்கு தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் ஓடி ஓடி உதவிடும் செய்திகள் மகிழ்ச்சி தருகிறது. கழகம் 27 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் மணி வாசகத்தை இதயத்தில் தாங்கித் தொண்டாற்றுவோம்! கொரோனா கொள்ளை நோயிலிருந்து மீள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உறுதி கொள்வோம்!

வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை – 8 05.05.2020

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com