Home செய்திகள் மதுரை அட்சய பாத்திரத்தின்1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா; திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பங்கேற்பு..

மதுரை அட்சய பாத்திரத்தின்1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா; திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பங்கேற்பு..

by Askar

மதுரை அட்சய பாத்திரத்தின் 1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா; திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பங்கேற்பு..

மதுரையில் கொரோனா காலம் முதல், தற்போதுவரை ஆயிரம் நாட்களாக தொடர்ச்சியாக சாலையோரம் வசிக்கும் வறியோர், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆதரவற்றோர்க்கு தினம்தோறும் மதுரையின் அட்சயப்பாத்திரம் மதிய உணவை வழங்கி வருகிறது. நேற்று ஆயிரமாவது நாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அரிசி மற்றும் உணவு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: வள்ளலார் தொடங்கிய பசியாற்றும் அரும்பணி, கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தொடர்ந்து நடக்கிறது. அங்குள்ள வள்ளலார் ஏற்றிய அடுப்பு அணையவே இல்லை. அதைப்போல மதுரையின் அட்சய பாத்திரம் பற்றவைத்த சமையல் அடுப்பு கடந்த ஆயிரம் நாட்களாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

1000 நாட்கள் உணவு கொடுத்திருக்கும் அட்சய பாத்திரத்தின் பணி போற்றலுக்கு உரியது. நீரின்றி அமையாது உலகு என்பது போல, உணவின்றியும் அமையாது உலகு. உயிர்களுக்கு பசியே ஆதாரம். அதனால்தான் பசியை பிணி என்றே சொன்னார்கள் முன்னோர். வயிற்றுக்குள் ஏற்படும் பசி உணர்ச்சியைப் போக்குபவர்கள் போற்றத் தக்கவர்கள்.

பசி இருக்கும் இடத்தில் சிந்தனைகள் தோன்றாது. ஆக, பசி பூர்த்தி ஆனால்தான் மனிதன் பூர்த்தி ஆகிறான். குடும்பத்தில் இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து அவர்களைப் பராமரிப்பவனே நல்ல குடும்பத் தலைவன் ஆகிறான். பல குடும்பங்களில் பசியை போக்கும், இந்தப் பணி அறப்பணி. இந்த பணியை ஒருவர் மட்டுமே செய்வது சாத்தியம் இல்லை. எனவே, இப்பணியை செய்பவருக்கு நாம் சேர்ந்து கை கொடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!