சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை..
மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). பஞ்சாலை தொழிலாளி. மதுரை விளாங்குடி விசாலாட்சி மில்லில் வேலை பார்த்து வந்த இவர் மில் ஏலம் போய்விட்டபின் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் கார்த்திகா (வயது 34) எம்.ஏ.பி.எட் எம்.பில் வரை படித்தபின் மதுரை அனுப்பானடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2018 ம் வருடம் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து தற்போது 6 வருடங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் டயாலசீஸ் செய்து வருகிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், இவரது தந்தையின் சிறுநீரகம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் சிறுநீரகத்தை பொருத்த முடியாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மாற்று யோசனையாக அவரின் தாயாரின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு ஏற்பாடு செய்த நிலையில், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதால் அவரது சிறுநீரகமும் பொருந்தாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் சிறுநீரகங்கள் தானமாக கேட்டு மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பதிவு செய்து வைத்து காத்திருந்தனர். தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் சிறுநீரகங்கள் தானமாக கிடைத்தும் அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் தொகை போக சுமார் 10 லட்சம் கூடுதலாக செலவாகும் என்ற நிலையில் இவர்களால் பணம் ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆகையால் தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் வேலம்மாள் மருத்துவ மனையில் பதிவு செய்து வைத்துள்ள அடிப்படையில் இவருக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உயிர் காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.