கொரோனா ஊரடங்கு காரணமாக இருவேளை உணவு கூட வழங்க முடியாமல் பிறவியிலேயே ஊனத்துடன் இருக்கும் சிறுவனை காப்பாற்ற தவிக்கும் தாய் தந்தையர்

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் அடுத்து ஆழ்வார் குளம் அருகில் வசித்து வருபவர் மகேந்திரன். இவருக்கும் கனகவல்லி என்பவருக்கும் திருமணமாகி இருபது ஆண்டுகள் கடந்து ஒற்றுமையுடன் ஓலைக்குடிசையில் தங்களின் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு அஜித் குமார் (19) ஐஸ்வர்யா (16) விக்னேஸ்வரன் (7) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமார் பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார் . இவரால் தானாக எழுந்து நடக்கவோ உடைகளை மாற்றிக் கொள்ளவோ முடியாத நிலையில் உள்ளதால் இவருக்கு தாய் கனகவல்லி எப்பொழுதும் தேவையான பணிவிடைகளை செய்வதற்காக வாழ்நாள் முழுவதையுமே தன்னுடைய மூத்த பிள்ளைகாகவே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார். தந்தை மகேந்திரன் டீக்கடை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாத காலமாக வேலை சரிவர இல்லாமல் ஒரு சில தினங்கள் மட்டும் வேலைக்கு சென்று வரும் இவரால் தனது பிள்ளைகளுக்கு இருவேளை உணவை கூட வழங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், தொடர்ந்து மாற்றுத்திறனாளியாக உள்ள தனது பிள்ளைக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது பிள்ளையை தங்களுடைய உறவினர்களிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லி அனுப்பியுள்ளனர்.இருவரும் வேலைக்குச் சென்றால் குடும்பச் சுமையை குறைக்க வாய்ப்புகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளியான அஜித் குமாரிடம் எப்பொழுதும் பணிவிடைகளை செய்வதற்காக ஒருவர் இருக்க வேண்டிய நிலை உள்ளதால் தங்களுடைய குடும்ப வருமானத்தை மேம்படுத்த எந்தவித பொருளாதாரமும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் இவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தானாக முன்வந்து உதவி கரம் நீட்டினாள் மாற்றுத்திறனாளியான மகனை தொடர்ந்து வளர்த்திட முடியும் என்பது இவர்களுடைய வேண்டுகோளாக உள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..