சேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூரில் அரசு அனுமதி பெற்ற சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் பாதிப்படுவதாகவும் கூறி நெப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினர் கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சவுடு மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் குவாரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தை கட்சி முக்கிய நிர்வாகிகளை 22 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 பேரை விடுதலை செய்யக் கோரி சீர்காழி அருகே சேந்தன்குடியில் அமைந்துள்ள செல்போன் டவரின் மீது பெட்ரோல் கேன் மற்றும் தேசியக் கொடியை கையில் ஏந்தி நெப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி, செந்தில் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று டவர் மீது ஏறிய இளைஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது சவுடு மணல் குவாரியை மூடாவிட்டால் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீர்காழி வட்டாட்சியர் ரமாதேவி, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் அவர்களை பாதுகாப்புடன் கீழே இறக்கினர். மணல் குவாரியை மூடக்கோரி சுமார் ஒரு மணிநேரம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்