Home செய்திகள் கொரோனா கற்றுத் தந்துள்ள பாடம்… கோடிக்கோடியாய் சேர்த்து வைத்திருப்பவர்களின் மனதை இனியாவது மாற்ற வேண்டும்..

கொரோனா கற்றுத் தந்துள்ள பாடம்… கோடிக்கோடியாய் சேர்த்து வைத்திருப்பவர்களின் மனதை இனியாவது மாற்ற வேண்டும்..

by Askar

உலகையே தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக பெருமைப் பட்ட மனித குலத்திற்கு இது சோதனைக் காலம் என்றே சொல்ல வேண்டும்…

மனிதனின் கண்டு பிடிப்புகளே.. அதிகார பசியே.. வர்த்தக நோக்கமே… இன்று மனித குலத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது…

கொரோனாவை உலகிற்கு பரப்பியுள்ள சீனா, அதற்காக துளியேனும் வருத்தப் பட்டதாக தெரியவில்லை..

வல்லரசு நாடாகுகளாக தம்மை உருவாக்கிக் கொண்டிருந்த நாடுகளின் நிலை.. கொரோனாவால் அங்கெல்லாம் உருவாகியுள்ள மாற்றம்.. பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டுக் கொண்டுள்ளது…

இந்த நிலையில்… கொரோனாவால் நமது நாடும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது…

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படியொரு சூழ்நிலையை.. ஊரடங்கு நிலையை… அளவற்ற பயத்தை நான் கண்டதில்லை…

ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க… தன் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும்…

எதிர்க் கட்சியினரே பாராட்டும் வகையில்… ஆட்சியினரை எதிர்த்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் கூட வாயைத் திறக்க முடியாத அளவிற்கு மக்களை பாதுகாக்கும் பணியில் இன்றைய மத்திய மாநில அரசுகள் மிகச் சிறப்பாகவே செயல் பட்டு வருகின்றன…

நடைபெற்று வருவது கொரோனாவிற்கு எதிரானப் போர்… கொரோனாவிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் பணி….

ஆனால்……

நமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை….

நூறு சதவிகிதத்தில் இரண்டு சதவிகிதம் உள்ள அரசு பணியாளர்களுக்கு பொருளாதார சங்கடம் என்பது எப்போதும் இல்லை…

நாட்டு மக்களில் நூற்றுக் கணக்கில்… ஆயிரக் கணக்கில் உள்ள தொழிலதிபர்களுக்கு எந்த விதமான பொருளாதார சங்கடமும் இல்லை..

ஒரு சில குடும்பத்தினருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் மேலாகவே சொத்துகள் உள்ளது, இவர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை..

சிறு முதலாளிகள், வியாபாரிகள் போன்றவர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை.

ஐ.டி.நிறுவனப் பணியாளர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை…

ஆனால்…. லாரி, பஸ், ஆட்டோ,டாக்சி ஓட்டுநர்களின் நிலை… கட்டிடத் தொழிலாளிகள், கூலித்தொழிலாளிகள் நிலை… விவசாயக் கூலிகளின் நிலை… ஓட்டல் பணியாளர்கள், நெசவாளிகள் நிலை… இப்படி நாம் பலரின் நிலையை சொல்ல முடியும்…

இத்தகைய கூலிகள் நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளனர்… இவர்களுடைய வீட்டில் அடுப்பெரிய வேண்டுமெனில் இவர்கள் எல்லாம் நாள்தோறும் உழைக்க வேண்டும்… உழைக்க முடியாமல் போனால்……

இவர்களிடம் இருப்பு என்று சொல்லிக் கொள்ளவும் ஏதும் இருக்காது…

அன்றன்று உழைத்தால் மட்டுமே…அன்றன்றைய பொழுதுகள் போகும் என்பதே இவர்களின் நிலை.

இந்த நிலையில்தான் கொரோனா… அதனில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள 21 நாட்கள் ஊரடங்கு…..

எந்த வேலையும் இல்லை… வருமானத்திற்கு எந்தவொரு வழியும் இல்லை… பெரும்பாலானோருக்கு, கையிருப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.. சிறுக சிறுக சேர்த்து வாங்கி வைத்திருக்கும் பொருட்களை விற்கவோ, அடகு வைக்கவோ கூட வழியில்லை…

இவர்களின் நிலை… நாட்டில், அரிசி பருப்பு காய்கறி எல்லாமே கிடைக்கிறது… ஆனால், அதை இவர்களால் வாங்க முடியாது.

இந்த நேரத்தில் அரசு மட்டுமல்ல… வசதி படைத்தவர்வளும் இவர்களுக்கு உதவிட முன் வர வேண்டும்… பணமாக என்றல்ல உணவுப்பொருட்களாகவும் வழங்கி இவர்களை எல்லாம் பாதுகாத்திட வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பெருமகன் வாழ்ந்த பூமியிது.

நமக்குள்ளும் அந்த மனம் வேண்டும்… கருணையும் இரக்கமும் வேண்டும்.

கொரோனா கற்றுத் தந்துள்ள பாடம்… கோடிக்கோடியாய் சேர்த்து வைத்திருப்பவர்களின் மனதை இனியாவது மாற்ற வேண்டும்…

இப்போது… முடிந்தவரை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் உதவிட வேண்டும்… வறுமையில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்திட வேண்டும்…

நமக்குரிய வலியை விட நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வலியே நமக்கு பெரிதாக இருந்திட வேண்டும்…

உங்கள் பாரதிசுகுமாரன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com