Home செய்திகள் குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு

குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு

by mohan

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்துவருகின்றன. எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கில், சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. அதேபோல் அந்த மாநிலத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ-க்களை கலந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டது. 16 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என நம்பிருந்த அரசு தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்கள் நிலைபாட்டிலிருந்து மாறவேயில்லை.

இன்று கூடிய பேரவையில், முதல்வர் குமாரசாமி உருக்கமாகப் பேசினார். அப்போது, “கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதல்வர் ஆவதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்கு வரும் ஆசை இல்லை என்றாலும், காலத்தின் கட்டாயத்தால் தந்தையின் அழுத்தத்தால் அரசியலுக்கு வந்தேன். இருப்பினும் 2018-ம் ஆண்டு தேர்தல் முடிவு வந்தபோதே அரசியலை விட்டு விலக நினைத்தேன். நான் நிறைய தவறுகளைச் செய்துள்ளேன். அதேநேரம், நிறைய நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன். நான் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்கிறார்கள்.இந்த நேரத்தில் சட்ட விதி 10 குறித்தோ, வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. மகிழ்ச்சியாகத் தியாகம் செய்கிறேன். ஊழல் செய்து பின்வாசல் வழியாக பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றப் பார்க்கிறது” என உருக்கமாகப் பேசினார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.அதன்படி, குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட்டது. முதலில், அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். ஒவ்வொரு வரிசையாக எழுந்து குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்குகளை அளித்தனர். பின்னர், அரசுக்கு எதிராக உள்ளவர்கள் வாக்களித்தனர். பின்னர், சபாநாயகர் முடிவை அறிவித்தார்.

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன்காரணமாக, 6 உறுப்பினர்கள் இல்லாததால், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. 14 மாத கால காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள அரசு முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, தனக்கு பெரும்பான்மை இருப்பதால், ஆட்சி அமைக்க கவர்னரிடம் எடியூரப்பா உரிமை கோர உள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!