Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா..

தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் “சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் முன்னாள் பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் மா. செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 04.10.2023 அன்று வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சுப்பிரமணியபுரம், வாசுதேவநல்லூர்) மற்றும் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி (T.N. புதுக்குடி, புளியங்குடி) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா தெரிவித்ததாவது, ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் கலைஞர். நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப் பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றிய மைத்தவர் கலைஞர் என தெரிவித்தார்.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் தெரிவித்ததாவது, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆற்றிய பணிகளை பேச நூற்றாண்டுகள் பல வேண்டும். நெஞ்சுக்கு நீதி என்னும் அவரது புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார். தமிழ்நாட்டை சீரிய நாடாக உருவாக்கிய சிற்பி. சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு அளித்தவர் என தெரிவித்தார். முன்னாள் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் தெரிவித்ததாவது, கலைஞரின் சட்டமன்ற வாழ்க்கை, அவரது உரைகள், சமயோசித புத்தி, அயராத உழைப்பு, எடுத்த பணிகளை தாமதிக்காமல் நிறைவேற்றும் திறன், முடியாததையும் முடிக்கும் செயலாற்றல், ஆகிய அரிய பண்புகள் மிகவும் போற்றத் தக்கவை. அவரது வாழ்க்கை மாணவர்களுக்கு ஒரு பாடமாக திகழ்கிறது என தெரிவித்தார்.

பேரவை முன்னாள் தலைவர் ஆர். ஆவுடையப்பன் தெரிவித்ததாவது, தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் காட்டிய வழியில் தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியும் அவர் காட்டிய வழியில் தான் நடைபெறுகிறது. கலைஞரின் சட்டமன்ற வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றி வருங்காலத்தை வளமாக்க வேண்டும். எளிய குடும்பத்தில் பிறந்து உலகில் உயர்ந்த உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். ஆற்றல் மிகுந்த அறிவாளி. தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி குறித்து எந்த நேரமும் சிந்திப்பவர். அவரது வழியில் அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி கு. காவிய பிரியா முதல் பரிசையும், தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி க.சூரியகலா இரண்டாவது பரிசையும், மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி மு.சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர். இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் “சமூக முன்னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் மாணவி ரா. எழிலரசி (அரசு மேல்நிலைப்பள்ளி வாசுதேவநல்லூர்) முதல் இடத்தையும், கி. கவிஷா (அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்த நல்லூர்) இரண்டாவது இடத்தையும், சு.ராமர் அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்தமங்கலம் மூன்றாவது இடத்தையும் வென்றனர். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ எனும் கருத்தரங்கத்தில்,  சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆர். ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச்செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!