இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -21
(கி.பி 1299-1922)
துருக்கியின் தலைநகரான இன்றைய இஸ்தான்ஃபுல் அரபியில் குஷ்துன்துனியா என்றும் ரோமர்களால் காண்ஸ்டாண்டி நோபிள் என்றும் அழைக்கப்பட்ட அந்த அழகிய நகரம் மூன்று புறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்பமாகும்.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரை சுற்றி பாதுகாப்பு கோட்டை சுவர் இருந்தது. அதன் கோட்டை வாயில்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன.
சிலசமயம் கடல்நீர் பெருக்கு ஏற்படும்போது படகுகளில் சென்று கோட்டை கதவுகளை மூடுவார்கள்.
கடலில் பாதுகாப்புக்காக கப்பல்களை சுற்றி நிற்க வைத்து இடைவெளிகளை இரும்பு சங்கிலிகளால் பிணைத்து வேறு கப்பல்கள் இவர்களை மீறி உள்நுழையாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் வெகு சிறப்பாக ரோம மன்னர்கள் செய்து வைத்து இருந்தனர்.
பைபிளில் கூறப்பட்டுள்ள ஏழு புனித தலங்கள் இங்கு இருப்பதால் இந்த நகரை கிறிஸ்தவர்கள் பெரிதும் நேசித்தனர்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த நகரை மிகச்சிறந்த படைத்தலைவர் வெற்றி கொள்வார் எனவும்,அதுவே மிகச் சிறந்த படை எனவும் அறிவித்தார்கள்.
ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது முதலில் வெற்றி கொள்ளப்படும் நகரம் ரோமா ? அல்லது காண்ஸ்டாண்டி நோபுளா என வினவப்பட்டது.
அதற்கு நபியவர்கள் முதலில் “ஹிரகல் என்று மன்னனின் நகரமாகிய காண்ஸ்டாண்டி நோபிள் நகரமே என்று முன்னறிவித்ததாக அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அறிவித்தார்கள்.
இந்த சிறப்பை பெற வரலாறு நெடுகிலும் பல முஸ்லிம் மன்னர்கள் முயற்சித்தும் அதனை வெற்றி கொள்ள முடியவில்லை.
முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில், ஸுப்யான் பின் அவ்ப் (ரலி) தலைமையில் ஒரு படையை அனுப்பினார்.
அதில் முக்கிய நபித்தோழர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி),அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) ஆகிய மூத்த தோழர்கள் படையில் பயணித்தனர்.
படை முற்றுகை இட்டிருந்த போது அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் கோட்டையின் மதில் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அதற்குப் பிறகு உமையாக்களின் ஆட்சியிலும், அப்பாஸிய மன்னர்களின் ஆட்சியிலும் பலமுறை முயன்றும் காண்ஸ்டாண்டி நோபிள் நகரை முஸ்லீம் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.
கி.பி.1393 ஆம்ஆண்டு உஸ்மானிய மன்னர் பயாசித் பெரும்படையுடன் காண்ஸ்டாண்டி நோபிள் நகரை முற்றுகையிட்டார்.
இஸ்லாமிய உஸ்மானிய அரசின் கீழ் வந்துவிடுமாறு ரோமானிய மன்னருக்கு கடிதம் அனுப்பினார்.
ரோமரான பைசாந்திய மன்னர் ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடினார்.
அதே சமயத்தில் மங்கோலியர்கள் முஸ்லீம்களின் மீது படை எடுத்து போர்தொடுத்தனர்.
ஆகவே முற்றுகையில் இருந்து பின்வாங்கி மங்கோலியர்களோடு போரிடும் சூழல் நிலவியதால் அப்போதும் அந்த நகரை வெற்றிகொள்ள முடியவில்லை.
இந்த சூழலில் மீண்டும் இரண்டாம் முராத் காலத்தில் காண்ஸ்டாண்டி நோபிள் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டார்.
அப்போது பேரரசிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அது உலகின் வரலாற்றையே மாற்றி எழுதப்போகிறது என்பதை யாரும் அறியவில்லை.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.