இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி -1
கப்ளிசேட்
உமைய்யாக்களின் பேரரசு-14 (கி.பி 661-750)
சைப்ரஸ் தீவு துறைமுகத்திலிருந்து மேலும் சில கப்பல்களை சேர்த்துக்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்களுடன் வட ஆப்பிரிக்கா நாடுகளை நோக்கி,
கடற்பகுதிகளில் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு கொண்டே அந்த உமைய்யாக்களின் கப்பல் அணிவகுப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைதியாக நகர்ந்து சென்றது.
உமர்(ரலி) அவர்களின் காலத்தில் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை இஸ்லாமிய படைகள் வெற்றி கண்டன.
அலி(ரலி) அவர்களின் ஆரம்ப காலங்களில் முஆவியா (ரலி) அவர்களோடு ஏற்பட்ட பிணக்கங்களால் வட ஆப்பிரிக்க பகுதிகள், முஸ்லீம்களிடம் இருந்த பகுதிகள், பறிபோயின.
ஆகவே அந்த வட ஆப்பிரிக்க பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முஆவியா (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
சைப்ரஸ் தீவிலிருந்து கிளம்பிய முஸ்லீம்களின் படைகள் துனிஷியாவை நோக்கி சென்றது.
துனிஷிய துறைமுகம் விளக்குகளால் ஜொலித்தது. இந்த முறை முஸ்லீம் படைகள் சைப்ரஸ் தீவில் செயல்படுத்திய போர்திட்டத்திற்கு அப்படியே நேர்மாறாக திட்டத்தை மாற்றி செயல்படுத்தியது.
நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்களும், சைப்ரஸ்தீவிலிருந்து கிடைத்த ஆயுதங்களும், முஸ்லீம்படைகளை மேலும் வலுவாக்கி இருந்தன.
ஆகவே திடீரென துனிஷியாவின் துறைமுகத்திற்குள் சக்கரவட்ட வியூகத்தில் உள்நுழைந்த முஸ்லீம்களின் கப்பல்கள் துனிஷிய கப்பல்களை தாக்கின.
திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத துனிஷிய படைகள், சுதாரிப்பதற்குள் முஸ்லீம் படைகள் சில கப்பல்களை துவம்சம் செய்து விட்டு வீரர்கள் கரையில் இறங்கினர்.
ஒரு சிறிய சண்டைக்குப் பின் துனிஷியா முழுவதும் முஸ்லீம்களின் கையில் தஞ்சமடைந்தது.
துனிஷியாவை தளமாக கொண்டு பல வட ஆப்பிரிக்க நாடுகளை உக்பத் இப்னு நாபீ என்ற உக்பா அவர்களின் தலைமையில் உள்ள அந்தப்படை கைப்பற்றியது. உமைய்யாக்களின் ஆட்சிப்பகுதி விரிந்து கொண்டே சென்றது.
அப்படியே நாடுகளை வெற்றிகண்டு கொண்டே சென்ற உமைய்யா படை இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்தது.
அமெரிக்கா கண்டம் கண்டு பிடிக்கப்படாத காலம் அது. அப்போது உலகின் கடைசி எல்லையாக அட்லாண்டிக் பெருங்கடலே கருதப்பட்டது.
தனது ராணுவத்துடன் அட்லாண்டிக் பெருங்கடலில் நின்று கொண்டு தளபதி உக்பா அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். இதோடு நிலப்பரப்பு முடிகிறது.நிலப்பரப்பு மேலும் இருந்தால் இறைவனின் அருளால் அதையும் கைப்பற்றுவேன் என்று அவர் பணிவுடன் உரைத்தது சிறப்பிற்குரியது.
படைகள் மத்திய தரைக்கடல் வழியாக திரும்பி வரும்போது முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து காண்ஸ்டாண்டி நோபுல் என்கிற இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரை முற்றுகை இட செய்தி வந்தது.
தரைவழியாக யஜீத் அவர்களும், ஹுசைன் (ரலி) அவர்களும் காண்ஸ்டாண்டி நோபுல் என்ற இஸ்தான்புல் நகரை நோக்கிவர, தளபதி உக்பாவின் கப்பல்படை காண்ஸ்டாண்டி நோபுல் துறைமுகத்தை அடைந்தது.
துறைமுகத்தின் எதிரே கண்ட காட்சி முஸ்லீம் படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.