Home செய்திகள்உலக செய்திகள் நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)

நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)

by mohan

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே. இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்.

சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த சூழலில் நாடு தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம். பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிறுவனம் சுமார் 100 ஆண்டுகள் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இந்நிலையில் 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கை இந்த சிப்பாய்ப் புரட்சியின் மூலம் தான் உதயமானது. இதனை வெற்றிகரமாக முறியடித்து இந்தியர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்தனர். பின்னர் பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா வந்தது. இங்கிலாந்தில் இருந்து கொண்டே உரிய பிரதிநிதிகளை நிர்ணயித்து ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்களை மிகுந்த ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினர். ஒருகட்டத்தில் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. இதற்கு ஏராளமான தலைவர்களின் கலகக் குரல்களும் காரணமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், மங்கள் பாண்டே, மகாத்மா காந்தி, ராணி லக்‌ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, சந்திர சேகர் ஆசாத், பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மிகவும் தைரியமாக புரட்சிக் கனலை பற்ற வைத்தனர். இதில் அகிம்சை வழியிலான மகாத்மா காந்தியின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது. இத்தகைய புரட்சிகள், போராட்டங்கள், உயிர் தியாகங்கள் உள்ளிட்டவற்றின் விளைவாக 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது தனிக்கதை.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராரும் விவசாயியுமான பிங்காலி வெங்கய்யா அவர்கள். இந்தியாவின் தேசியக் கொடி நாட்டின் அனைத்து குடிமக்களின் பெருமையும், நம்பிக்கைகளையும், பிரதிபலிக்கிறது. அப்படிப்பட சிறப்பு வாய்ந்த நமது தேசிய கொடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள். ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயா ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு, 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக்க் கொடி இந்தியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் இந்தியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது, வெள்ளை நிறம் உண்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. கொடியில் உள்ள பச்சை நிறம் செழிப்பைக் குறிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்ம விதிகளை குறிக்கிறது.

தேசியக் கொடியில் நடுத்தர வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் அசோக சக்கரம் உள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி சட்டப்படி, காதி, ஒரு சிறப்பு வகை கையால் நெய்யப்பட்ட பருத்தி அல்லது பட்டினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கொடியை தயாரிப்பதற்கான உரிமை காதி அபிவிருத்தி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்திடம் உள்ளது. டென்சிங் நோர்கே இந்திய தேசியக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக 29 மே 1953 அன்று ஏற்றினார். 2002 க்கு முன்னர், இந்தியாவின் சாதாரண குடிமக்கள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைத் தவிர, வேறு சந்தர்ப்பப்க்களில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் கொடி சட்டத்தை திருத்தி, உரிய நெறிமுறைகளை கடைபிடித்து, எந்த நேரத்திலும் கொடியை ஏற்றலாம் என அனைத்து குடிமக்களுக்கும் உரிமைகளை வழங்கியது. கொடி ஏற்றுதல் தொடர்பான நெரிமுறைகளின் படி, கொடி பகல் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். தேசிய கொடிக்கு மேல் வேறு எந்த அடையாளமோ அல்லது வேறு எந்த கொடியோ இருக்கக்கூடாது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சுதந்திர தினம், தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவராலும் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும். தன்னலமற்ற தியாகிகளை நினைத்து பார்க்க வேண்டிய அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி சுதந்திரத்தைக் கட்டி காப்பது நமது கடமை. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் அரங்கேறும். தியாகிகள் கவுரவிக்கப்படுவர். சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய நலனுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டு மக்களை உற்சாகமூட்டும் வகையிலான உரைகளை தலைவர்கள் நிகழ்த்துவர். குறிப்பாக சுதந்திர தினத்தன்று டெல்லியின் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதேபோல் நாடு முழுவதும் முதலமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தேசியக் கொடிய ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்வர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source By: itstamil, samayam, zeenews. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!