ஆதரவற்ற முதியவர்களை தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியில் ‘நிஷா பவுண்டேசன்’

மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிஷா பவுண்டேசன் ஆதரவற்ற ஏழை எளிய மக்களையும், முதியவர்களையும் தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியினை இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆம்புலன்ஸ் சேவை, முதியோர் மீட்பு குழு, பொதுமக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் என பொது நல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து நிஷா பவுண்டேசன் நிறுவனர் சித்தீக் கூறுகையில் ”இறைவனின் அருளை நாடி தான தர்மங்கள் செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கும் மிகப் பெரிய பொருளாதாரங்கள் எல்லாம் தேவை இல்லை. அதே போல் பெரிய வசதி படைத்த பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நம்மை பிடித்த துன்பங்களும், சிறு சிறு துயரங்களும் நம்மை விட்டு நீங்க தான தர்மங்களை இறைவன் காட்டிய வழியில் நிச்சயம் செய்ய வேண்டும். தர்மம் செய்வதற்கு நல்ல மனம் இருந்தால் போதும். 50 ரூபாய் இருந்தாலும், அதனை அழகிய முறையில் தர்மங்களை செய்ய கற்று தருகிறோம். சிறு பணமாக இருந்தாலும் நம்முடைய கையாலேயே அதனை தர்மம் செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அலாதியானது.

மதுரை மாவட்டத்திலும், கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாலை ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு நேரடியாக தேடி சென்று உணவுகளை வழங்கி வருகிறோம். இது போல உணவுகளை நீங்களும் வாங்கி, உங்கள் கையாலேயே வழங்கிடவும், ஆதரவற்றவர்களை நாடி செல்லவும் எங்களை தொடர்பு கொள்ளலாம். வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக..ஆமீன்” என்று பொது நல அக்கறையுடன் தெரிவித்தார்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்காக மகத்தான சேவை செய்து வரும் நிஷா பவுண்டேசன் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களை கீழை நியூஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.