தொண்டி அருகே சிக்கிய 63 லட்சம் ஹவாலா பணம்..

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வரும் தனியார் பேருந்தில் ஹவாலா பணம் கொண்டு வரப்படுவதாக தொண்டி சுங்கத்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ், கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் சுங்கத்துறை பணியாளர்கள் அப்பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், நிறுத்தங்களில் சோதனை செய்தனர்.

எஸ்.பி., பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று (07.12.18) காலை 4 மணிக்கு வந்த தனியார் பேருந்தை தீவிர சோதனை செய்தனர். பேருந்தின் கடைசி இருக்கையில் அயர்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்த அவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்த அவரை அவரது உடமைகளுடன் கீழே இறக்கினர். துரித விசாரணையில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மரைக்காயர் தெருவைச் சேர்ந்த அப்துல் ரவூப் 50 எனவும், அடிக்கடி வெளிநாடு சென்று திரும்புபவர் என தெரிந்தது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது காகிதங்களில் பார்சல்களாக கட்டு கட்டாக ரூ.62,25,200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது, கொடுத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட அப்துல் ரவூப் மீது சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த பணம் மதுரை வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.