![IMG-20170227-WA0016[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/02/IMG-20170227-WA00161.jpg?resize=678%2C381&ssl=1)
வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார்.
இன்றைய நவீன உலகில் இருக்கும், துரித வாகன போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத காலக் கட்டத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் கால்நடையாக நடந்தே பல்லாயிரம் மைல்களை கடந்து ஹஜ் கடமைகளை நிறைவேற்றி உள்ளனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், குதிரை, கோவேரிக் கழுதை, ஒட்டகம் போன்ற கால் நடைகளின் உதவியோடும், வசதி படைத்தவர்கள் கப்பலிலும் மக்காவுக்கு சென்றனர். தற்போது நவீன யுகத்தில் சைக்கிளில் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும் முதியவரின் முயற்சி ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ” இறைவனுடைய அருளால் என்னுடைய ஹஜ் பயணத்தை சைக்கிளில் பயணித்து நிறைவேற்ற வேண்டுமென்ற அவாவை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இருந்து நடந்தே சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய ரஹ்மத்துல்லாகானின் முயற்சி மேலும் அதிகரிக்க செய்தது. என்னுடைய தோல் பதனிடும் தொழில் மூலம் உழைத்து சேமித்த பணத்தை ஹஜ் பயணத்திற்காக வைத்திருக்கிறேன்.
வாணியம்பாடியிலிருந்து மக்கா செல்ல ஆகும் 6750 கி.மீ தூரத்தை கடக்க நான்கு மாத காலம் பயணிக்க வேண்டும். என்னுடைய பயணம் அடுத்த கட்டமாக ஆந்திரா, அஜ்மீர், டெல்லி, அம்ரிஸ்டர், பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாக சவூதி அரேபியாவுக்குள் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். பயணத்தின் போது வழியில் தென்படும் பள்ளிவாசல்களில் தங்கி சிறு ஓய்வு எடுத்து கொள்வேன். அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இவர்களது பயணத்தை இலகுவாக்கி, நாடியவாறு தனது ஹஜ் கடமையை நிறைவேற்றி அல்லாஹுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்த புனிதராக நலமுடன் தாயகம் திரும்ப வல்ல இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்.