Home செய்திகள் பூமியை பசுமையாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வேண்டுகோள்..

பூமியை பசுமையாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வேண்டுகோள்..

by ஆசிரியர்

பூமியின் பசுமையை பாதுகாக்கும் பொருட்டு ஒரு கோடி மரங்களை உருவாக்கும் உன்னதமிக்க திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி சமூக ஆர்வலர் பூ. திருமாறன் தெரிவித்துள்ளதாவது, மரங்களின் எண்ணிக்கை கூடிவிட்டால் மண்ணில் மழை பொழிவும் அதிகரித்து விடும். மனிதர்கள் கால்நடைகள், மிருகங்கள், பறவைகளுக்கு என இருக்கும் தண்ணீர் பஞ்சம் அகன்று விடும். காவல் துறையை விட, ராணுவத்தை விட மிகப் பெரிய படை மாணவர் படை. அந்த அபார படைக்கு பொறுப்பாய் திகழும் ஆசிரியர்கள் மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து உலக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். விதைப் பந்துகள் என்பது கையளவு ஈரக் களி மண்ணில் 3 அல்லது 4 விதைகளை உள்ளே பொதிந்து லட்டு போல கொழுக்கட்டை போல உருட்டி காயப்போட்டால் அதுதான் விதைப்பந்து. வேப்பங்கொட்டை புளியமுத்து என எந்த விதைகளையும் விதை பந்தில் வைக்கலாம். எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இதனை கற்றுத் தர வேண்டும். பல பள்ளிகளில் மாணவ மாணவியர் லட்சக்கணக்கில் விதைப்பந்துகளை உருவாக்கி வைத்துள்ளனர். செய்து முடித்த விதைப் பந்துகளை காடு, குளம், கண்மாய், வாய்க்கால் ஓரம், தரிசு, சாலையோரம், கோயில், மசூதி, வேதக் கோவில், சுடுகாடு, இடுகாடு என எங்கும் எறியலாம். மழை பெய்தவுடன் விதைகளை பாதுகாக்கும் மண் கரைந்து விதை மண்ணை தொடும், விண்ணை தொடும் விருட்சங்கள் ஆகும். கலெக்டர், தாசில்தார், சப் கலெக்டர், பேரிடர் மேலாண்மை அதிகாரி, வனத்துறை அதிகாரிகளுக்கு விதைப்பந்துகள் தயாரித்துள்ள பள்ளிகள் கடிதம் எழுத வேண்டும். மாணவ மாணவியரின் உழைப்பு வீணாகக் கூடாது.

“தலைக்குப் பத்து விதைப்பந்துகள்” செய்து முடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வண்ணச் சான்றிதழை அப்துல் கலாமின் ஆத்ம நண்பர் டாக்டர். விஜயராகவன், மதுரை பாலு, முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், வெங்காடம்பட்டி திருமாறன் வழங்குகின்றனர். கலாம் பெயரில் ஒரு கோடி மரம் வளர்ப்பது என்பது திட்டம். அதனால் விதைப்பந்துகள் தயாரிப்பதற்கு “கோடியில் ஒருவர்” என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவ மாணவியரை களம் இறக்க ஆசிரிய பெருமக்கள் ஆர்வமூட்டும் போது தானாகவே பெற்றோரும் களமிறங்குவர். 45 கோடி மாணவ மாணவியரின் தாய் தந்தை 20 கோடி இளைஞர்களின் பெற்றோர் விதைப்பந்து தயாரிப்பு, மரம் வளர்ப்பு என களமிறங்கி விட்டால் அதுதான் இமாலய வெற்றி. பூமியின் பசுமையை பாதுகாக்கும் உன்னதமிக்க இத்திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பசுமைப் பாடத்தை நாம் செய்து காட்டி உலகிற்கு கற்பிப்போம். உலகம் சுபிட்சம் அடையட்டும். இவ்வாறு திருமாறன் கூறியுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!