வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்து கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெண்டை, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் என காய்கறிகள் வருகின்றன. தக்காளியை பொறுத்தவரை ஓசூர், கிருஷ்ணகிரி, வி.கோட்டா, பலமநேர், கோலார் பகுதிகளில் இருந்து வருகிறது. கேரட், பீட்ரூட் போன்றவை கேரள மாநிலம் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இருந்து வருகிறது. வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவை வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது. அதேபோல் பிற காய்கறிகளும் வேலூர் மார்க்கெட்டுக்கு வருகின்றன.இந்த நிலையில் காய்கறிகள் வரத்து சீராக உள்ளதால், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை போன்ற பல்வேறு காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ₹450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து உள்ளது. தற்போது கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்தது. இதனால் விலை கிடு கிடு என உயர்ந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூண்டு வரத்தும் அதிகமாகி உள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது. தற்போது ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. வரத்து தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டு உள்ளதால் ₹100க்கு கீழ் பூண்டு விலை விற்பனைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்..
You must be logged in to post a comment.