Home செய்திகள் இராமநாதபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2.39 லட்சம் டன் மீன்கள் பிடிப்பு…

இராமநாதபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2.39 லட்சம் டன் மீன்கள் பிடிப்பு…

by ஆசிரியர்

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மீன் மரபணு வள செயலகம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் ‘மன்னார் வளைகுடா வன உயிரின காப்பக கடல்சார் வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கு நிறைவு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழிலை முக்கிய தொழிலாக கொண்டு உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில் 94 ஆயிரம் டன் அளவிலும் 2018 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் டன் அளவிலும் மீன்பிடி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழக மீன்பிடியில் 20 சதவீத அளவாகும். மீனவர்களுக்கு மன்னார் வளைகுடா பகுதி முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியானது இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி  வரை 225 மீனவ கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கடல்சார் வன உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய கடல்சார் வன உயிரினங்கள் பாதிக்கப்படுவது பருவநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கிறது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியை பாதுகாத்திடும் வகையில் அதில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது இன்றியமையாததாகும். இயற்கை சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளும் காரணமாகவே பெரும்பாலான வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடற்கரை மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஆகியோருக்கு மீன்பிடித் தொழிலோடு கூடுதலாக வருமானம் ஈட்ட ஏதுவாக மீன்பிடித் தொழில் சார்ந்த இதர தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல் பாசி வளர்த்தல், வண்ண மீன் குஞ்சு வளர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன கடந்தாண்டில் உதவித் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி அளவிலும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.230 கோடி அளவிலும் ஆக மொத்தம் ரூ.530 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் அதிகளவில் உள்ளனர். அரசு செயல்படுத்தும் இத்தகைய கடனுதவி திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமானது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடையாகும் அதை முழுமையாக பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடத்தில் பாதுகாப்பாக ஒப்படைப்பது நம் அனைவரது கடமையாகும் என பேசினார்.

தேசிய மீன் மரபணு வள செயலகம் இயக்குநர் குல்தீப் கே.லால், கடல்வாழ்உயிரினங்களுக்கான பாதுகாப்பு மைய இயக்குநர் எம்.சுதாகர், மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன், மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் கே.பாலகிருஷ்ணன் உட்பட உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், மீனவ கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!