Home செய்திகள் மீன் வளத் துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..

மீன் வளத் துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட கடல் வளத்தை அழிக்கும் இரட்டை வலை மீன்பிடி விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும், பாரம்பரிய சிறிய விசைப்படகுகள் மன்னார் வளைகுடா (தென்) கடல் தீவுகளுக்கு அருகே மீன்பிடி தொழில் செய்ய விடாமல் தடுக்கும் மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மண்டபம் மீன்வளத் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக கடலோர விசைப்படகு மீனவ சங்க மாநில பொதுச்செயலர் என்.கே. போஸ், நாட்டுப் படகு மீனவர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.அருள், சோழியக்குடி மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சிகேஎம் கணபதி, மண்டபம் மீனவர் சங்கத் தலைவர் பெரி. பாலசுப்ரமணியன், செயலாளர் சர்புதீன், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எம். ஜாஹீர் உசேன், விசைப்படகு மீனவர் நல சங்கத் தலைவர் செய்ய து சுல்தான், செயலாளர் எம்.ஜி.விஜய ரூபன், மீனவர் நல சங்க செயலாளர் கான், தேசிய மீனவர் சங்க செயலாளர் செந்தில், செம்மீன் மீனவர் சங்க செயலாளர் சி. செல்வக்குமார், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் எம்.நம்புராஜன், முன்னாள் கவுன்சிலர் பூவேந்திரன் மற்றும் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் வளத் துறை அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோபிநாத் மீனவர்களுடன் சமரசம் பேசினர். இரட்டை வலை மீன்பிடி முறையை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டரை மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

மண்டபம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!