Home செய்திகள் படைப்புழுக்களால் மக்காச்சோளம் பயிர்கள் சோதம் – நிவாரணம் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம்..

படைப்புழுக்களால் மக்காச்சோளம் பயிர்கள் சோதம் – நிவாரணம் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம்..

by ஆசிரியர்

கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் விவசாயிகள் பெரும்பாலும் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதில் தற்போது படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.

இந்த படைப்புழு தாக்குதலுக்கு அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விதைகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு, விவசாயிகள் படைப்புழுவால் பாதிப்படைந்த மக்காச்சோள பயிர்களுடன் வாயில் துணியை கட்டிக்கொண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் படைப்புழு தாக்குதலுக்கு காரணமான தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோஷங்கள் முழங்கினர்.

போராட்டத்துக்கு பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பி.பரமேஸ்வரன், மாவட்ட இயற்கை விவசாய தலைவர் எம்.கருப்பசாமி, பாரதிய கிசான் ஒன்றிய தலைவர் ஜெயராமன், இளையரசனேந்தல் கிளை தலைவர் எஸ்.மகாராஜன், இளையரசனேந்தல் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் த.முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், இந்த ஆண்டு நல்ல பருவச்சூழ்நிலை மற்றும் மழை இருந்தும், மக்காச்சோள பயிர்களில் அமெரிக்க படைப்புழுக்களின் தாக்குதலால் விவசாயிகளுக்கு முழுவதுமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். மருந்து தெளித்து இந்த மருந்துகள் கட்டுப்படவில்லை. பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து இதுவரை எந்த அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. எனவே, அமெரிக்க நிறுவனத்தின் விதைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறு இருந்தால் சிபிஐ விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ரெங்கநாயகலு கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த விதை உற்பத்தி நிறுவனமான மாண்சாண்டோ கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, அங்கு பயிரிடப்பட்ட இந்த நிறுவனத்தின் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. இந்தாண்டு தமிழகத்தின் மானாவாரி நிலங்களை படைப்புழுக்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. இதற்கு காரணமான மாண்சாண்டோ நிறுவனத்தின் விதைகள் தான். இதனை விதைச்சான்று அலுவலர்கள் அனுமதித்துள்ளனர். விவசாயிகளுக்கு இந்த விதைகள் மீது தான் சந்தேகம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட விதை நிறுவனம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்றார்.

 செய்தி ந:-  தூத்துக்குடி அஹமது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!