Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ராஜபக்‌ஷேவின் விருந்தில் கலந்து கொண்ட கனிமொழிதான் தூத்துக்குடி வேட்பாளர் – ஓ.பி.எஸ்., தாக்கு.. ஆனால் ஸ்டெர்லைட் “கப் சிப்”…

ராஜபக்‌ஷேவின் விருந்தில் கலந்து கொண்ட கனிமொழிதான் தூத்துக்குடி வேட்பாளர் – ஓ.பி.எஸ்., தாக்கு.. ஆனால் ஸ்டெர்லைட் “கப் சிப்”…

by ஆசிரியர்

தூத்துக்குடியில்,பா.ஜ.க வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாகப் பரப்புரைசெய்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், இறுதிவரை ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையைப் பற்றி ஒருவார்த்தைகூட பேசாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, “காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணியில் இருந்த 10 ஆண்டுகளில் தி.மு.க-வைச் சேர்ந்த 9 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதையும் கொண்டுவரவில்லை.

கடந்த 1972-ம் ஆண்டு, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது அனுமதி இல்லாமல் கர்நாடகா 4 அணைகளைக் கட்டத் தொடங்கியது. அப்போது, தமிழகமெங்கும் போராட்டம் வெடித்தது. பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது. ”கர்நாடக அரசு 4 அணைகளைக் கட்டிக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு வந்தவர்தான் கருணாநிதி. முந்தைய தி.மு.க ஆட்சியில் வன்முறை கலாசாரம்தான் அதிகமாக நிலவியது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில், ஒன்றரை லட்சம் பேர் கொன்றுகுவிக்கப்பட்ட போது, இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்றக் குழு, ராஜபக்‌ஷேவை சந்தித்தது. அந்தக் குழுவில் கனிமொழியும் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு சென்று, ராஜபக்‌ஷே அளித்த விருந்தை சாப்பிட்டுவிட்டு, அவர் அளித்த பரிசைப் பெற்றுக்கொண்டு வந்தார். அவர்தான் தூத்துக்குடியின் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். தி.மு.க-வின் ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை.

40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிசெய்தார்கள். அந்தப் பணத்தை அதற்குத்தான் செலவழித்தார்களா, இல்லை எதற்கு செலவழித்தார்கள் என்பதே தெரியவில்லை. மின்வெட்டுக்காக ஆட்சி பறிபோன வரலாறு உலக வரலாற்றிலேயே தி.மு.க-வுக்குதான் உண்டு. தற்போது, எதிர்க்கட்சியாக இருந்தும்கூட தி.மு.க தனது அராஜகத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து மக்கள் தோல்வி பாடம் கற்பித்தும், தி.மு.க திருந்தவில்லை. திருந்தியது போல நடிக்கிறார்கள். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் தரக்குறைவான முறையில் பேசிவருகிறார். அவர் வளர்ந்த விதம் அப்படி. அதனால்தான், மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறார். அ.தி.மு.க அரசு காணாமல்போகும் என்கிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. கருணாநிதியும் அவரது கூட்டாளிகளும் செய்த சதிகளை எல்லாம் முறியடித்து இயக்கம் ஆலமரமாக ஒன்றரைக் கோடி விழுதுகளோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. பூகம்பமே வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலினாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசி தமிழிசைக்கு வாக்கு சேகரித்தார்.

தமிழிசைக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, “ஸ்டெர்லைட் பிரச்னையை பத்தி பேசுங்கய்யா”ன்னு கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் ஒருவர். அந்த நபரை அப்படியே ஓரம் கட்டினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதனைத் தொடர்ந்தும் பேசினார் ஓ.பி.எஸ். ஆனால், இறுதி வரை தூத்துக்குடியின் முக்கியப் பிரச்னையான ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னைகுறித்து ஒருவார்த்தைகூட பேசாமல் கிளம்பிச் சென்றார். இது,  மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!