தூத்துக்குடியில் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.,வின் தேசிய தலைவர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் முதலில் பேசிய பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை, “என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் குற்றச்சாட்டு இல்லாத வேட்பாளர். 2ஜி ஊழல் குற்றவாளிதான் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி. எனக்கு திகார் சிறை எங்கு இருக்கிறது என்பது தெரியாது.
ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி. கனிமொழி இதற்கு நேர் எதிர் உதாரணம். காரணம், அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து மக்களுக்காக என்ன செய்தார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. அமித் ஷா நடந்து வந்தாலே வெற்றிதான். ஆனால், பறந்து வந்துள்ளார். இதனால், வெற்றி உறுதியாகி விட்டது. தாமரை சேற்றில், குளத்தில், ஆற்றில் மலரலாம். ஆனால், தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா, “தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்பது மிகப்பெரிய கூட்டணி. கடந்த முறை மிகப்பெரிய அளவில் கூட்டணி இல்லாத போதும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த முறை 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும். தமிழகத்தை பா.ஜ.க.,என்றுமே புறக்கணித்ததில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சியடையச் செய்வோம்.
தி.மு.க.,வும் காங்கிரஸும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் உள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறப் போவதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கூறுகிறது. காஷ்மீர் விசயத்தில் எந்த சமரசமும் இல்லை. காஷ்மீரை ஒருபோதும் பா.ஜ.க., விட்டுக்கொடுக்காது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா? தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல்வாதிகள். இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதவரைத்தான் பா.ஜ.க., வேட்பாளராகத் தமிழிசையை நிறுத்தி உள்ளோம்.” என்றார்.
You must be logged in to post a comment.