Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு…மேலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம்…

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு…மேலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம்…

by ஆசிரியர்

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை (18/04/2019) நடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை மட்டும் ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று திடீரென உத்தரவிட்டது. இந்நிலையில் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று (17/04/2019) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடியில் ரெய்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் ரெய்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முத்தரசன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆளும் கட்சி கூட்டணியின் அட்டூழியங்களை வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், வேலூர் தேர்தலை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது. இதுபோல், தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தியதும் கண்டனத்துக்கு உரியது.

கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): தமிழகம் முழுவதும் அதிமுக,பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் விநியோகித்து வருகின்றனர். இவற்றை தடுக்காத தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தலை ரத்து செய்துள்ளது பாரபட்சமானது.

ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): திமுக இந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் வேலூர் தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இதனால் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் இருந்த நம்பிக்கை குறைந்துள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிற செயல். அதேபோல தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள். இதன்மூலம் நேர்மையான தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இத்தகைய படுபாதக செயலை செய்தவர்கள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!