Home செய்திகள் மக்கள் வளர்த்த நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..!

மக்கள் வளர்த்த நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..!

by mohan

விபத்தில் இறந்த வளர்ப்பு நாயின் உடலை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.இதுகுறித்த விவரம் வருமாறு; தெலுங்கான மாநிலம் நிஜாமாபாத் நகரில் உள்ள போயகாலி காலனியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 14 ஆண்டுகளாக தங்கள் காலனி பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். ஷியாம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அந்த ஆண் நாயை, காலனியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்போல் பராமரித்து வந்தனர்.அதுபோல், தன் மீது மக்கள் செலுத்திய அன்புக்கு ஏற்ற வகையில், அந்த நாயும் மிகவும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் காலனிவாசிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த அந்த நாயை காலனி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நாய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இதையறிந்ததும், தங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்ததுபோல் துடித்த காலனிவாசிகள், அந்த நாயை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, நாய் உடலை மலர்களால் அலங்கரித்து ஒரு வேனில் கிடத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.பின்னர், ஊர் பொது மயானத்துக்கு நாய் உடலை கொண்டு சென்று, இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தினர். பலரும் அங்கு வந்து நாய் உடலுக்கு வாய்க்கரிசி, வாய்க்காசு போட்டு வணங்கினர்.இதையடுத்து, அங்கு தயாராக தோண்டப்பட்டிருந்த குழியில் நாய் உடலை கிடத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். நாய் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பலரும் விழுந்து வணங்கி கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினர்.ஒரு வளர்ப்பு நாயின் மரணத்தை, தங்கள் உறவினர் மரணம்போல பாவித்து இறுதி மரியாதை செலுத்திய இந்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!