Home செய்திகள் ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு-தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ் பாரதி..

ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு-தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ் பாரதி..

by Askar

ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு-தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ் பாரதி..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களை இழிவாக பேசியதும், தலித் சமுதாயத்துக்கு பதவி கிடைத்தது குறித்தும் ஆட்சேபகரமாக பேசியதும் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்ததன் பேரில் தனது செயலுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆரம்பம் முதலே கண்டபடி பேச ஆரம்பித்தார். எச்.ராஜாவை அவரது சமூகத்தை குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் திட்டினார். பின்னர் வடமாநிலத்தில் இருப்பவர்களுக்கு மூளையே இல்லை என பேசினார். பின்னர் தலித் சமுதாயத்துக்கு பதவி கொடுத்தவர் கலைஞர், உயர் நீதிமன்றத்தில் 6, 7 நீதிபதிகள் ஆதிதிராவிட சமுதாயத்தினர் இருப்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசினார். பின்னர் நான் இன்னும் பேசினால் கண்டபடி பேசிவிடுவேன் என பேசியவர் பிரசாந்த் கிஷோர் எங்களுடன் இணைந்தால் அதற்கு உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது இதெல்லாம் விவாதப்பொருளா? என தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் குறித்து மிகவும் அவதூறாக பேசினார்.

இவையெல்லாம் பெரும் சர்ச்சையானவுடன் தலித் சமூகம் குறித்த தனது பேச்சுக்கு ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் ஊடகங்கள் குறித்த பேச்சுக்கு எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் அவர் பேசிய காணொலி வைரலானவுடன் பத்திரிகையாளர் சங்கங்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இது திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரை ஸ்டாலின் கடிந்து கொண்டதாகவும் உடனடியாக கூட்டம் முடிந்தவுடன் ஊடகங்கள் முன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் ஊடகங்கள் முன் தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்டத்தில் நான் பேசியது குறித்து காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நோக்கத்தோடு திருத்தி பரப்பப்பட்டு வருகிறது.

பெரியார் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் தலைவர்களை விமர்சிப்பதை பார்த்து மனம் தாங்காமல் ஒரு சில வார்த்தைகள் பேசினேன், அந்த வார்த்தைகள் யாருக்கும் மன வருத்தத்தையோ, கஷ்டத்தையோ கொடுத்து இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்நோக்கத்தோடு புண்படுத்தும் நோக்கத்தில் எந்த ஊடகத்தை பற்றியும் பேசவில்லை. தவறாகவும் சொல்லவில்லை. இதுகுறித்து தலைவர் கேள்விப்பட்டு உடனடியாக ஊடகங்களை சந்தித்து வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கூறிய காரணத்தாலும், நானும் அதை தவறென்று உணர்ந்ததாலும் வருத்தம் தெரிவிக்கிறேன்”. என்று தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!