Home செய்திகள் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், எண்பது ஆண்டு பொதுவாழ்க்கை, நாற்பத்துமூன்று ஆண்டு தி.மு.க பொதுச்செயலாளர், க.அன்பழகன் இன்று மறைந்தார் (மார்ச் 7, 2020)

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், எண்பது ஆண்டு பொதுவாழ்க்கை, நாற்பத்துமூன்று ஆண்டு தி.மு.க பொதுச்செயலாளர், க.அன்பழகன் இன்று மறைந்தார் (மார்ச் 7, 2020)

by Askar

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், எண்பது ஆண்டு பொதுவாழ்க்கை, நாற்பத்துமூன்று ஆண்டு தி.மு.க பொதுச்செயலாளர், க.அன்பழகன் இன்று மறைந்தார் (மார்ச் 7, 2020)

திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான். திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன். எனக்கு அண்ணன் இல்லை அதனால் அன்பழகனை என் அண்ணனாக பார்க்கின்றேன் என்பார் கருணாநிதி. 1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார் க.அன்பழகன் (ராமையா அவரது இயற்பெயர்). பின்னாளில் தமிழ்மீது கொண்ட பற்றால் அன்பழகன் என மாற்றிக்கொண்டார். இவர் வெற்றிச்செல்வி என்பவரை பிப்ரவரி 21, 1945 ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் உள்ளனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் உள்ளனர்.சாந்தகுமாரி டிசம்பர் 23, 2012 ஆம் நாள் மறைந்தார்.

க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் செப்டம்பர் 12, 1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது.[14] மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் செப்டம்பர் 11, 1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் (எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிக்கும்போதே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க கூட்டங்களை நடத்துவது, கூட்டங்களில் பங்கேற்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவந்தார். படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரி பேராசிரியராக பணியாற்றும்போதே 1957-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1962 -ல் மீண்டும் எழும்பூரில் போட்டியிட்டவர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாச்சலத்திடம் தோல்வியுற்றார். 1962 -ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 முதல் 1971 வரை திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பங்கு பெற்றார். 1971 – சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் வென்று திமுக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1977-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர். 1980-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர். 1983-ல் இலங்கை தமிழ் மக்களின் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். 1984-ம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியில் வென்றார். 1989-ல் அண்ணா நகரில் நின்று வென்றார். அப்போது அவர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1991- ல் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996-ல் துறைமுகத்தில் போட்டியிட்டு வென்று கல்வி அமைச்சராக பணியாற்றினார். 2001-ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006- ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வென்றார் இம்முறை திமுக அரசில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016- சட்டமன்ற தேர்தலில் வயோதிகம் காரணமாக போட்டியிடவில்லை.

சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து “புதுவாழ்வு” என்னும் மாத இதழை 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்) முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அழகுராணி, இன-மொழி வாழ்வுரிமைப் போர், உரிமை வாழ்வு, தமிழர் திருமணமும் இனமானமும், தமிழினக்காவலர் கலைஞர், தமிழ்க்கடல், தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி, தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார், தொண்டா? துவேஷமா?, நீங்களும் பேச்சாளர் ஆகலாம், வகுப்புரிமைப் போராட்டம், மக்கள் மன்றம், வளரும் கிளர்ச்சி, வாழ்க திராவிடம், விடுதலைக் கவிஞர், விவேகானந்தர் – விழைந்த மனிதகுலத் தொண்டு போன்ற நூல்களை எழுதியுள்ளார். “தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்பட்டார். 1977-ம் ஆண்டுமுதல் 43 ஆண்டுகாலம் திமுகவின் பொதுச்செயலாளராக மிக நீண்டகாலமாக கட்சி பணியாற்றி வந்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான நண்பர். ஸ்டாலின் அவரை எப்போதும் பெரியப்பா என்றுதான் அழைப்பார். ஸ்டாலினுக்கு தனது தந்தைக்கு அடுத்து மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் அன்பழகன். தந்தையிடம் குறிப்பிட முடியாத விஷயங்களை பெரியப்பா அன்பழகன் மூலம் தந்தையிடம் கொண்டுச் செல்வார் என்று கூறுவார்கள்.

திமுகவின் சோதனையான காலக்கட்டம் என்றால் 1975-ம் ஆண்டு காலக்கட்டம் எனலாம் அப்போது திமுக தலைவர் கருணாநிதியை ஒதுக்கிவிட்டு பலரும் விலகிச் சென்ற நேரத்திலும் விலகாது உடனிருந்தவர் அன்பழகன். அதனால்தான் அவர் இறுதிவரை திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் மதிப்புடன் வைக்கப்பட்டார். “நான் கழகத்தின் தலைவர். அவர் பொதுச்செயலாளர்! இருவரும் கலந்தே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கழக சட்டதிட்டம். எங்களுக்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுத்திட தலைமை நிர்வாகக் குழுவையோ, செயற்குழு, பொதுக்குழுக்களையோதான் கூட்டுகிறோம். எங்கள் உறவை வெட்டி முறித்திடக் கூட வீணர்கள் எண்ணினார்கள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாங்கள் என்பதை எங்கள் சகோதரப் பாசத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் இனமும் நாடும் வாழ இந்தக் கழகம் வாழவேண்டும் என்று நாங்கள் வாழும் வரையிலும் இணைந்து நின்றே இலட்சியப் பயணம் வகுத்திடுவோம்!”

இவர் தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர். 1981-ம் ஆண்டு அன்பழகன் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட மலரில் கருணாநிதி எழுதியது. மனதில் பட்டதை பட்டென சொல்லக்கூடியவர், அவரது மனதுக்குப்பட்டதை செய்யக்கூடியவர். அதனால்தான் திமுகவில் அவரது கருத்துக்கு தனி மரியாதையும், தமக்கு அடுத்த இடத்தையும் கருணாநிதி வழங்கியிருந்தார். முதுமையின் காரணமாக பிப்ரவரி 24, 2020ல் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மார்ச், 07, 2020 நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!