Home செய்திகள்உலக செய்திகள் உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது இன்று (மார்ச் 25, 1954).

உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது இன்று (மார்ச் 25, 1954).

by mohan

தொலைவிலிருந்து பார்ப்பது’ எனப் பொருள்படும் ‘டெலிவிஷன்’ என்ற வார்த்தை 19வது நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டுவந்திருக்கிறது. 1926ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டுஎன்ற விஞ்ஞானி முதன் முதலில் தொலைக்காட்சியை கண்டு பிடிப்புகண்டுபிடித்தார். எந்த தொழில்நுட்பத்துக்கும் மூலக்காரணம், மனிதனின் மூளையில் இயற்கை விதிகள் ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல். அந்தத் தூண்டுதல் அளிக்கும் அறிதல். தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் செலினியம் என்னும் தனிமத்தின் குணமான, ஒளி பட்டால் எலெக்ட்ரான்களை வெளியிடும் தன்மையை மனிதன் கண்டறிந்ததுதான். இந்தக் கண்டுபிடிப்பு 1873ம் ஆண்டு நிகழ்ந்தது. செலினியம் என்னும் தனிமத்தில் ஒளி படும்போது, அந்த ஒளியின் தன்மைக்கேற்ற மின் சமிக்ஞ்சையை (Signal) வெளியிடுகிறது. இதுவே ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி கேமராக்களின் தொழில் நுட்பம்.

ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலாக 1926-ம் வருடம் ஜனவரி மாதம், சலனப்படம்(Moving Picture) ரேடியோ அலைகள் மூலம் அலைபரப்பப்பட்டு, ரேடியோ அலை ஏற்பிகளால் அது மீண்டும் படமாக மாற்றி திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த முதல் அலைபரப்பில், திரையில் கிடைக்கப்பெற்ற படம், அத்தனை தெளிவானதாக இருக்கவில்லை. அது ஒரு முகத்தின் சலனப்படம் என்பதை அறியும் அளவுக்கு மட்டும் தெளிவானதாக இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு, முதல் முறையாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு தொலைக்காட்சி அலைபரப்பப்பட்டு அங்கு மீண்டும் படமாக திரையில் மாற்றப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஐரோப்பிய நாடுகளின் முதல் தொலைக்காட்சி நிறுவனம் 1929ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இவ்விதமாக தொலைக்காட்சி தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் 1925ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சார்லஸ் பிரான்ஸிஸ் ஜென்கின் என்பவர், நிழல்படங்களை ஐந்து மைல் தூரத்துக்கு அலைபரப்புதல் செய்து காட்டினார். இந்த அலைபரப்பில், ஒரு காற்றாலை இயங்கும் சலனப்படத்தை அலைபரப்பினார். இதுவும் ஒரு நிழலுருவம் போல தெளிவற்ற படமாகவே தெரிந்திருக்கிறது.

1927ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பெல் டெலிஃபோன் நிறுவனம் முதன்முதலாக படத்துடன் இணைந்த ஒலியையும் அலைபரப்புதல் செய்து காட்டியது. இந்த அலைபரப்புதலில் படங்கள் ஒரு வினாடிக்கு 18 சட்டங்கள் (Frames per Second அல்லது FPS) என்னும் விகிதத்தில் அலைபரப்பப்பட்டது. தற்போதைய தொலைக்காட்சி அலைபரப்புகள், வினாடிக்கு 30 முதல் 60 சட்டங்கள்வரை உள்ளன. இந்த எண்ணிக்கை, நமது கண் மற்றும் மூளையின் பிரித்தறியும் திறனை அடிப்படையாகக் கொண்டது. வினாடிக்கு 18 சட்டங்களுக்குக் குறைவாக இருந்தால், அதை சலனப்படமாக (Moving Picture) மனித மூளையால் அறிய முடியாது. அவை தனித்தனி நிழல் படங்கள் வேகமாக காட்டப்படுவது போல தோன்றும்.1928ம் ஆண்டு உலகின் முதல் தொலைக்காட்சி நிலையம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், W2XB என்னும் பெயரில் தொடங்கப்பட்டது.

1933ம் ஆண்டில் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின், ‘கேத்தோடுடியூபை”க் கண்டுபிடித்திருந்தார். அவருடைய முயற்சியினால் உருவாகிய எலெக்ட்ரானிக் ஸ்கேனிங் சிஸ்டம் (Electronic Scanning System) ஜோனின் தொலைக்காட்சியைக் காட்டிலும் தெளிவான படங்களை ஒளிபரப்பும் திறமையைக் கொண்டிருந்தது. இதனைக்காரணம் காட்டி பி.பி.சி. ஜோனுடன் தனது உடன்படிக்கையைமுறித்துக் கொண்டு புதிதாய் நிறுவப்பட்ட இ.எம்.ஐ (EMI) நிறுவனத்தாருடன் பி.பி.சி. தன்னை இணைத்துக் கொண்டது. ஸ்வாரிகினின் நிறுவனமான ஆர்.சி.ஏ (RCA)மற்றும் இ.எம்.ஐயும் சேர்ந்துமேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவையைத் தொடங்கின.உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவது இந்தமூன்று நிறுவனங்களின் நோக்கமாக இருந்தது.

தொலைக்காட்சி என்னும் போது, மூன்று அம்சங்கள் முக்கியமாகக் கொள்ள வேண்டும். முதலில் அலைபரப்ப வேண்டிய காட்சியை அலைபரப்பும் வடிவுக்கு மாற்றுவது. இதை ‘கேமரா’ என்னும் பொது வார்த்தையால் குறிக்கலாம். இரண்டாவது, அலைபரப்பும் வடிவுக்கு மாற்றப்பட்ட காட்சியை மின்காந்த அலைகளாக மாற்றி பொதுவெளியில் உலவ விடுவது. இறுதியாக பொதுவெளியில் அலையும் மின்காந்த அலைகளைப் பிடித்து, அவற்றை காட்சிகளாக மீண்டும் மாற்றுவது. 1937ம் ஆண்டு முதன்முறையாக பிரிட்டிசு அரச நிகழ்ச்சி ஒன்றை, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ‘எமிட்ரான்’ என்னும் கேமரா கருவியின் துணைகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்புகள் எல்லாம் கறுப்பு வெள்ளை-யில் மட்டுமே இருந்தன. ஆனால், வண்ணத் தொலைக்காட்சி கருவிகளுக்கான ஆராய்ச்சிகள் இந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த காலத்தில், வண்ண ஒளிபரப்புக்கு தேவையான அலைக்கற்றையின் (Band width) தேவை, கறுப்பு வெள்ளை ஒளிபரப்புக்கு தேவையானதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இதுவே வண்ணத் தொலைக்காட்சி குறித்த வேகமான ஆராய்ச்சிகளுக்கும் தடையாக அமைந்தது.

வண்ணத் தொலைக்காட்சிகளும் வண்ண ஒளிபரப்புகளும் 1953ம் வருடத்திலேயே தொடங்கியிருந்தாலும், அதற்கு அப்போது தேவைப்பட்ட அதீத செலவினங்களாலும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் அதீத விலையாலும் 1960-களின் நடுப்பாதிவரைக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் பெரும்பாலும் கறுப்பு வெள்ளையிலேயே இருந்தன. மார்ச் 25, 1954ல் உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. தொலைக்காட்சிக்கான ஆராய்ச்சிகள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு நிகழ்ந்து கொண்டிருந்ததால், தொலைகாட்சிக்கும் ஒளிபரப்புக்கும் ஒரு பொது விதிகள் (Standard) தேவைப்பட்டது. இந்த விதிகளின் தொகுப்பு அமெரிக்காவில் NTSC என்னும் பெயரில் 1941-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் 1953-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, அமெரிக்கா முழுவதும் பின்பற்றப்பட்டது. இந்த NTSC விதிகள், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு பல சிக்கல்களை அளித்தது எனக்கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்த ஆராய்ச்சிகள், வெவ்வேறு தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தியதன் காரணமாக இருக்கலாம். அந்த சிக்கல்களைக் கடப்பதற்காக அவர்கள் ஒரு புதிய விதிகளை அறிமுகப்படுத்தினர். இது PAL எனப்பட்டது. இது 1962-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் PAL விதி, அமெரிக்கா தவிர மற்ற பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் பொது விதியாக மாறியது.

1990-களின் நடுவில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் தினம்தோறும் தொலைக்காட்சி தொழில்நுட்பம் புதுப்புது பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கிறது. இன்று அது எங்கு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். தொலைக்காட்சியை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர செலவிடப்பட்ட உழைப்பையும் அறிவையும் அறியும்போது உண்மையில் வியப்பு ஏற்படுகிறது அந்த தொலைக்காட்சியால் மனித இனம் அடைந்திருக்கும் அடைந்து கொண்டிருக்கும் செயலின்மையையும் மந்தத் தன்மையையும் உணரும்போது! மனித இனத்தின் மகத்தான ஒரு கண்டுபிடிப்பு, பல்வேறு நேர்மறை செயல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பொழுதுபோக்கு என்னும் செயலுக்காகவே அல்லது மனிதனின் செயலின்மைக்காகவே பெரும்பாலும் பயன்பட்டு, மனித இனத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதியை தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. கூடவே செயலின்மை அளிக்கும் உடல் மற்றும் மனப்பிரச்சனைகளும்.

தொலைக்காட்சி மூன்றாம் உலக நாடுகளில் மிக முக்கிய பொழுதுபோக்குசாதனமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா, இலங்கை போன்றநாடுகளில் திரைப் படங்கள், நாடகங்கள், தொடர் நாடகங்களை காணஊடகம் என்ற முறையில் தொலைக்காட்சி பயன்படுத்தப்படுகிறது.தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மாத்திரமல்ல.அதில், கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம்,நாட்டு நடப்புகள், நிகழ்கால விஷயங்கள் மற்றும் வாழ்கைக்குதேவையான பல விஷயங்கள் பொதிந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டுமுதன் முதலாக டில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும்தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சிஒளிபரப்பும் துவங்கியது. இந்திய நாட்டில் தூர்தர்ஷனை மட்டுமே நம்பியகாலம் மாறி இன்றைய கால கட்டத்தில் செயற்கைக் கோள் ஒளிபரப்பின்மூலம் அதிகமான அலைவரிசைகளைக் காண முடிகிறது.

இன்று சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கலையம்சம் சார்ந்த நிகழ்ச்சிகளை, அறிதல் சார்ந்த நிகழ்ச்சிகளை உண்மையில் தேட வேண்டும். பெரும்பாலான நிகழ்ச்சிகளும் மனித மூளையை மந்தமாக்கும் நிகழ்ச்சிகளே. செயலின்மையை பெரிய செயலாக மாற்றும் நிகழ்ச்சிகள். செய்திகள், விவாதங்கள் என்னும் பெயர்களில், ஒரு சிலர் மக்களின் எண்ணங்கள் எந்ந திசையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த திசையை நோக்கி மட்டுமே திரும்ப வைக்கும் அத்து மீறல்கள். இன்று தொலைக்காட்சி வணிகத்தின் முக்கியமான ஊடகம். எனவே உடனடி பொருளாதார லாபம் மட்டுமே கணகில் கொள்ளப்படுகிறது. அது உருவாக்கும் செயலின்மை அளிக்கும் பொருளாதார இழப்புகளும், நிகழ்ச்சிகள் இலவச இணைப்பாக வழங்கும் உடல் மற்றும் மனப் பிரச்சனைகள் அளிக்கும் இழப்புகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com