Home செய்திகள்உலக செய்திகள் தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 22, 1922).

தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 22, 1922).

by mohan

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ஏப்ரல் 12, 1854ல் அரங்கசாமி நாயுடுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் பிறந்தவர். சேலம் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றார். படிக்கும் பருவத்திலேயே “யாப்பிலக்கண வினா விடை“ என்ற நூலை எழுதி, தமது தமிழாசிரியர் அமிர்தம்பிள்ளையின் உதவியோடு வெளியிட்டார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலே மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த கணிதம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். நாயுடு தென்னகத்தின் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆய்ந்து ”தட்சண இந்திய சரித்திரம்” என்னும் நூலை சுமார் ஆயிரம் பக்கங்களில் வெளியிட்டார். இந்த நூலில் “விசயசூசிகை“ என்ற தலைப்பில் 34 பக்கங்களில் பொருளடக்கம் தந்துள்ளார்.

இந்து சமய தத்துவம், சமயத் தலைவர்களின் வரலாறு, இறைவன் இலக்கணம், ஆன்ம இலக்கணம், பக்தியியல்பு, வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் ஆகியவை பற்றி விரிவாக கூறும் ”ஆர்ய சத்திய வேதம்” என்ற நூலையும் எழுதினார். வங்க வேதியர் ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாசத்தில் பங்கேற்றுப் பணியாற்றினார். பெண்களுக்கு எனத் தனிப் பள்ளியை நிறுவினார். இதன் கொள்கைகளை வலியுறுத்தி “நீதிக் கும்மி“ என்ற நூலை எழுதினார். சுதேசாபிமானி, கோவை அபிமானி, கோவை கலாநிதி ஆகிய பத்திரிகைகளை இருபதாண்டுகளுக்குமேல் நடத்தினார். கோவையில் முதல் நூற்பாலை தோன்ற இவரே தன் நிலத்தின் ஒரு பகுதியை தந்தார். கோவை மாநகராட்சி மன்றம் நடைபெறுகின்ற விக்டோரிய மண்டபம் விக்டோரிய மகாராணியின் 50ம் ஆண்டு பொன்விழா நினைவாக இவர் கட்டினார்.

ஆங்கில அரசு இவரது பொதுப்பணியை பாரட்டி இவருக்கு “ராவ்பகதூர்“ பட்டம் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார். ஏழை பால்ய விதவைப் பெண்களுக்கு கல்வியளித்து அவர்களுக்கு புனர்விவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார். தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம், தலவரலாறுகள், ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை தமிழில் எழுதிப் பதிப்பித்தவர். தெலுங்கிலும் நூல்களைப் பதிப்பித்தவர். தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். கோயம்புத்தூரில் ஆரம்பகால தொழிற்துறைகளைக் கட்டி எழுப்பியவர்களில் ஒருவர். பல பொதுத் துறைகளை நிறுவியவர். தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ஜனவரி 22, 1922ல் தனது 67வது அகவையில் சேலம் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!