Home கட்டுரைகள்விழிப்புணர்வு கட்டுரைகள் தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

by ஆசிரியர்

மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, மாமா, அண்ணா என்றழைத்த வெகுளிக் குழந்தை. அந்தத் தாத்தாக்களும் மாமாக்களும் அண்ணன்களும்தான் அவளைக் குதறிப்போட்டுள்ளார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை வக்கிரம்?

மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல. அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும்போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது. இது அத்தனை பேரிடமும் உண்டு. ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது. ரத்த உறவுகளையே கூறுபோடும். பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடுவது அது. அயனாவரம் சம்பவத்தைத் தொடர்ந்து சாமானியர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை பொங்குகிறார்கள். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் சமூக ஊடகங்களில் வெடித்துச் சிதறுகின்றன. ஆனால், இந்த ஆவேசமும் அற உணர்வுகளும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது அடுத்த ‘நிர்பயா’வுக்கான ஆபத்து.

 தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் தகவலின்படி நம்மைச் சுற்றி எட்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சிதைக்கப்படுகிறது. அதற்கெல்லாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்? அடுத்தவர் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆத்திரப்படும் நாம், நமது குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறோம். நம்மைச் சுற்றியும் நம் குழந்தைகளைச் சுற்றியும் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன?

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான ‘பீடோ ஃபைலிக்’ மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இங்கிலாந்தின் தேசிய குற்றக் கண்காணிப்பு முகாமைத் தொடங்கி சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ‘இன்டர்போல்’ வரைக்கும் இந்தக் கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்திருக்கின்றன. இந்தக் குற்றக் கலாச்சாரம் நம் நாட்டில் மும்பை, கோவா, புனே, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவி பல ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள் குழந்தைகள் விவகாரங்களை கவனித்துவரும் சமூகச் செயல்பட்டாளர்கள்.

“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம். உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது. ‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள். ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும். இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன. அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை – வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

குடும்ப உறவு முறைகளால்தான் குழந்தைகள் பாலியல் ரீதியாக பெருமளவில் துன்புறுத்தப்படுகிறார்கள். கசப்பான, ஜீரணிக்க முடியாத உண்மை இது. எந்நேரமும் இந்தக் குற்றம் நம் வீட்டிலும் நடக்கலாம். எங்கெல்லாம் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. பள்ளிக்கூடம் தொடங்கி பாதுகாப்பானதாக நாம் கருதும் வீடுகள்வரை நிலைமை இதுதான்.

இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. ஒரு குழந்தையின் சிரிப்பில் நாம் அத்தனை கவலைகளையும் மறந்துவிடுகிறோம். எனவே, குழந்தைகள் விஷயத்தில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் என யாரையும் கொஞ்சம் எச்சரிக்கையுடனே அணுகுங்கள்; தவறே இல்லை. ஏனெனில், மனித மனதைவிட மிகப் பெரிய வக்கிரக் கிடங்கு உலகில் வேறு எதுவும் கிடையாது!

குழந்தை தொலைந்துவிட்டால்…

விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர். எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம். சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள். வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள். இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்.

Source: The Hindu – Tamil

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com