Home செய்திகள்உலக செய்திகள் ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998)

ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998)

by mohan

டேம் மேரி லூசி கார்ட்ரைட் (Mary Cartwright) டிசம்பர் 17, 1900ல் இங்கிலாந்து ஐன்ஹொவில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் டிங்பை கார்ட்ரைட் தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். லெமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். இவருக்குப் பள்ளியில் வரலாறு பிடித்த பாடமாக இருந்தது. தனது பள்ளிப் படிப்பை முடித்த கார்ட்ரைட், அக்டோபர் மாதம் 1919ல் உலக புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காகச் சேர்ந்தார். உயர் படிப்பில் மேரி கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது, இவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பெண்களே அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். முதல் உலகப்போர் முடிந்த காலம் அது. ஆகையால், போரில் பங்கேற்ற மாணவர்கள் பலரும், பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப வந்து தங்களுடைய படிப்பைத் தொடங்கினார்கள். அதிக அளவு மாணவர்கள் இருந்தபடியால், பெரிய அரங்குகளிலும் அறைகளிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. நெரிசல் காரணமாக மேரியால் பாடக்குறிப்பை, சரியாக கவனிக்கவோ, எழுதவோ முடியாமல் போனது.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அவருக்கு கணிதப் பயிற்சித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மேரி, இரண்டாம் வகுப்பு (Second Class) மட்டுமே பெறமுடிந்தது. இதனால், கணிதத்தை விட்டு தனக்குப் பிடித்த பாடமான வரலாற்றையே திரும்பத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்பொழுது மேரிக்கு, ஒரு சிறப்பு விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்விருந்தில் பேராசிரியர் வி.சி. மார்டன் என்பவரைச் சந்தித்தார். கார்ட்ரைட்டின் கணித ஆர்வத்தை உணர்ந்தார் பேராசிரியர் மார்டன். விட்டேக்கர் மற்றும் வாட்சன் ஆகிய இரு கணித அறிஞர்கள் இயற்றிய நவீன பகுப்பாய்வு (Modern Analysis) எனும் புத்தகத்தை நன்கு படிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், ஜி.எச். ஹார்டியின் விரிவுரைகளை அவருக்குப் பரிந்துரை செய்தார்.

பேராசிரியர் மார்டனின் அறிவுரையை ஏற்ற மேரி, மீண்டும் தனது முழு கவனத்தை கணிதத்தின் மீது செலுத்தினார். ஜி.எச். ஹார்டியின் கணித விரிவுரைகள், மேரியை மிகவும் கவர்ந்தன. இதனால் கணிதத்தை மிகுந்த ஈடுபாட்டோடு கற்கத் தொடங்கினார். அதன் விளைவாக மூன்றாம் ஆண்டு கடைசித் தேர்வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1923ம் ஆண்டில் கணிதத்தில் பட்டம் பெற்றார். தன் குடும்பச் சூழல் காரணமாக, மேரியால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. ஆகவே, ஒரு பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகவே தன் காலத்தைக் கழித்தவருக்கு, கணிதத்தில் ஆய்வுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜி.எச். ஹார்டியின் உதவியோடு, அவரது ஆராய்ச்சிக் குழுவில் மாணவராகச் சேர்ந்தார். அவரது ஆய்வானது “சிறப்பு வகைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பூஜ்யங்கள்” 1930 ஆம் ஆண்டு ஜே. ஈ லிட்டில்வுட்டால் சரிபார்க்கப்பட்டது.

ஒரு நாள் மாலையில் தனது ஆய்வுக்குழு மாணவர்களுக்கு, குறிப்பிட்ட கணிதப் புதிர்களின் பட்டியலை ஹார்டி வழங்கினார். அந்தப் பட்டியலில் வழங்கப்பட்டிருந்த அநேக புதிர்களுக்கு மேரி கார்ட்ரைட் மிகச்சிறந்த தீர்வுகளை அளித்தார். இவரின் கணிதத் திறனைக் கண்ட, ஹார்டி வியந்தார். மேரி கார்ட்ரைட்டை சிறந்த கணித ஆய்வாளராக உருவாக்க ஹார்டியின் வழிகாட்டுதல் பெருந்துணையாக அமைந்தது. தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மேரி கார்ட்ரைட், 90க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த கணித ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, புகழ் பெற்றார். கணித உலகில் இவரது பெயர் பெருமளவில் தெரியத் தொடங்கியது. கார்ட்ரைட்டின் ஆய்வு முடிவுகள், சார்புகளின் தன்மைகள் மற்றும் வகைக்கெழு சமன்பாடுகளின் தீர்வுகள் பற்றிய முக்கிய செய்திகளை அளித்தது.

தனது வழிகாட்டி ஹார்டியின் உற்ற தோழரான புகழ்பெற்ற கணித அறிஞர் லிட்டில்வுட் (John Edensor Littlewood) என்பவருடன் இணைந்து ஆய்வுசெய்தார். பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பியல் கருத்துகளை ஒருங்கிணைத்து, முதன்முதலாக மிக அரிய ஆய்வுக் கட்டுரையை கார்ட்ரைட் வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இன்றளவில் பிரபலமாக இருக்கும் ஒழுங்கின்மை கோட்பாடு கேயாஸ் இயல் (Chaos Theory) எனும் கோட்பாட்டிற்கு தொடக்கமாக விளங்குகிறது. தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு, கணித உலகில் முக்கிய பங்களித்தவர்களில் ஒருவராக மேரி கார்ட்ரைட் திகழ்ந்தார். டிரிச்லே தொடர்கள், ஏபெல் கூட்டல் முறைகள், போரல் படரும் தன்மைகள், போன்ற கருத்துகள் இவரது ஆய்வின் மூலம் வெளிப்படும் மிக முக்கிய அம்சங்களாகத் திகழ்கின்றன. கணிதத்தில் அரிய ஆய்வுகளை மேற்கொண்ட மேரி கார்ட்ரைட்டுக்கு, பல உயரிய கௌரவங்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. 1947ஆம் ஆண்டில், லண்டன் ராயல் கழகத்தின் மதிப்புறு உறுப்பினர் F.R.S. (Fellow of Royal Society) பதவிகூட இவருக்கு அளிக்கப்பட்டது. இதைப் பெற்ற முதல் பெண் கணித அறிஞர் மேரி கார்ட்ரைட் ஆவார். 1969ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டு இரண்டாம் எலிசபெத் ராணி, மேரி கார்ட்ரைட்டுக்கு டேம் கமாண்டர் (Dame Commander of the British Empire) எனும் சிறப்பு அந்தஸ்து அளித்து பெருமைப்படுத்தினார்.கணிதத்தில் அளப்பரிய சாதனைகளைப் படைத்த மேரி கார்ட்ரைட், பெண்கள் கணிதத்தில் சாதிக்க முடியும் என்பதற்கு பெரிய உதாரணமாகத் திகழ்ந்தார். மகத்தான பெண் கணித அறிஞராக விளங்கிய மேரி கார்ட்ரைட், ஏப்ரல் 3, 1998ல் தனது 97வது அகவையில் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது பங்களிப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com