Home செய்திகள் புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!..

புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!..

by ஆசிரியர்

இவ்வருட ஹஜ்ஜிக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்காக சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் சார்பில் 1500க்கும் மேற்பட்டவர்கள் மக்கா சென்றனர்.

இதில் தம்மாமில் இருந்து கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்களின் தன்னார்வ தொண்டினை பாராட்டும் வகையில் கடந்த வெள்ளியன்று மாலை தம்மாம் ரோஸ் உணவக ஆடிட்டோரியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் பொதுசெயலாளர் அப்ஸர் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் இக்பால் மௌலவி இறைவசனம் வாசித்து துவக்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்டு தன்னார்வ ஊழியர்களின் பொதுநல தொண்டினைப் பாராட்டி இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் கிழக்கு மாகாண தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி பேசினார்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி தமது உரையில் கூறியதாவது, “படைப்பினங்கள் மீது கருணை காட்டாதவர், படைத்தவனால் கருணை காட்டப்படமாட்டார். என்னும் இறைத்தூதர் முகம்மது நபி அவர்களின் போதனையை உள்வாங்கி கொண்டு ஹஜ்ஜுக்கு வருகை தந்த ஹாஜிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு சேவையாற்றிய உங்களின் தன்னலம் பாராத இந்த தூய பணியை இறைவன் பொருந்தி கொண்டு உங்களுக்கு அருள்புரிவானாக என்று பிரார்த்தனை செய்தார்.

இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் மாவட்ட தலைவர் சகோ.முகம்மது பைசல் அவர்களின் தலைமையின் கீழ் சென்ற 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் ஹஜ்ஜின் காலத்தில் தாங்கள் சந்தித்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

சகோ.பைசல் தமது அனுபவத்தை குறிப்பிடும் போது, ஹாஜிகளுக்கு பணிவிடை செய்பவர்கள் தங்கள் அமைப்பின் பெயர் பொறித்த சீருடை அணிந்து கொள்வது அவசியமாகும்; இது விளம்பரத்திற்கானதல்ல, நாம் தான் தன்னார்வ ஊழியர்கள் என்பதை ஹாஜிகள் தெரிந்து கொண்டு அவர்களின் உதவிக்காக நம்மை தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும் என்றார்.

இதே போன்று தான் நமது நாட்டிலும் இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிடும் இயக்க தோழர்கள் தங்கள் அமைப்பின் பெயர் பதித்த சீருடை அணிந்து கொள்வது விளம்பரத்திற்கானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டினார்.

கடும் வெப்பத்தால் தாகத்துடன் தண்ணீர் தேடிய ஹாஜிகளுக்கு தண்ணீர் வழங்கிய நமது ஊழியர்களின் அயராத சேவைகளை கண்டு மகிழ்வு கொண்ட ஹாஜிகளில் ஒருவர் தனது காலி பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு தண்ணீர் புகட்டியது மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

சகோ.அப்துல் ரஹ்மான் குறிப்பிடும் போது, பீகாரை சேர்ந்த வயதான கணவன் -மனைவி ஹாஜிகளில் தமது கணவனை தொலைத்து விட்டு அவரை தேடவும் முடியாமல் தமது இருப்பிடமும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஹாஜிமா எனது சீருடையை கண்டதும் நம்பிக்கை பெற்றவராக தனது கஷ்டத்தை கூறியதும் உடனடியாக அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை அமைதிப்படுத்தினேன்.

பிறகு அவர்களின் இருப்பிடத்தை தேடி கண்டு பிடித்து அங்கே அழைத்து சென்ற போது நமது அமைப்பின் மற்றொரு ஊழியர் ஹாஜிமாவின் கணவரை அங்கே கொண்டு வந்து சேர்த்தார்.தமது கணவரை கண்டதும் ஓடிப்போய் கைகோர்த்துக் கொண்டு கண்ணீர் வடித்து இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டார்கள் இருவரும்.

80 வயதான அந்த தம்பதிகள் எங்கள் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு கலங்கிய கண்களோடு துஆ செய்தது எங்கள் வாழ்வில் நாங்கள் மறக்க முடியாத நற்பேறாகும் என குறிப்பிட்டார். சகோ. ஃபிர்தௌஸ் குறிப்பிடும் போது, கூட்டத்தில் ஒரு ஹாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்த போது உடனடியாக மருத்துவமனை செவிலியருக்கு போன் செய்தேன்.ஆம்புலன்ஸ் வரும் வரை ஹாஜியின் மார்பை பம்பிங் செய்து கொண்டிருக்க வேண்டுமென்று சொல்லியது போலவே என்னால் முடிந்த வரை பம்பிங் செய்து கொண்டிருந்தேன்.

10 நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்ததும் ஹாஜியை அதில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தோம்.அந்த நேரத்தில் சிறிதும் தாமதிக்காது முதலுதவி செய்யும் தைரியத்தை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் எனக்குறிப்பிட்டார். சகோ. நாசர் குறிப்பிடும் போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர்கள் ஹஜ்ஜிக்கு வந்திருந்த போது அவர்களுக்கு இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் தான் பணிவிடை செய்து நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாக என்னிடம் சொன்னார்கள்.

அதனால் அந்த நன்றிக்கடனுக்காகவே இந்த வருடம் நானும் ஹாஜிகளுக்கான பணிவிடையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்றவர்,இத்தகைய நற்பணிகளால் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். சகோ. இக்பால் மௌலவி குறிப்பிடும் போது, நோயாளிகள் தங்களின் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எவ்வாறு மருத்துவர்களை நம்பிக்கையோடு தேடுவார்களோ,அதே போன்று தான் மக்காவில் சீருடை அணிந்த எங்களைப் போன்ற தன்னார்வ ஊழியர்களை ஹாஜிகள் தேடுவது போல் இருந்தது.

பெரும்பாலான ஹாஜிகள் தங்களின் இருப்பிடம் தெரியாமல் இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை கூட அலைந்துள்ளார்கள்.அத்தகைய ஹாஜிகள் எங்களை தொடர்பு கொள்ளும் போது அவர்களை தள்ளு வண்டியில் அமர வைத்து அவர்களின் இருப்பிடத்தில் சேர்த்த போது ஹாஜிகளின் முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே கிடையாது என்றார்.

சகோ. ஷேக் அலாவுதீன் குறிப்பிடும் போது, ஷைத்தானுக்கு கல் எறியும் இடத்திற்கு ஹாஜிகள் வரும் போது தங்களின் லக்கேஜ் சுமைகளை தூக்கி வருவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்ததுடன் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தார் ஹாஜிகளுக்கு முன் கூட்டியே இந்த தகவலை சொல்லி விடுவது நல்லது என்றார். கல்லெறியும் இடத்திற்கு வரும் ஹாஜிகள் லக்கேஜுகளையும் சேர்த்து தூக்கி வருவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை அங்கே காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக சகோ.பிலால் நன்றி கூறினார்.கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com