இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், தெரிவித்ததாவது: தமிழ் நாட்டிலுள்ள +1, +2 ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றல் உள்ளிட்ட படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டம் வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு +1, +2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஜன.9 காலை 9:30 மணி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் ஜன.10 காலை 9:30 மணி முதல் நடைபெறவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர், முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 பேர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வீதம் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.