Home செய்திகள் நிலத்தை ஒத்திவைத்து கோயிலில் விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தானம்,கி.பி.13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டில் தகவல்…

நிலத்தை ஒத்திவைத்து கோயிலில் விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தானம்,கி.பி.13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டில் தகவல்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோயிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றைத் தானமாக வழங்கிய தகவலைச் சொல்லும் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள்.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, செயலர் சோ.ஞானகாளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் மாஞ்சூரில் மேற்கொண்ட களஆய்வின் போது, அவ்வூரைச் சேர்ந்த மூர்த்தி சிவன் கோயிலில் கல்வெட்டுகள் இருப்பதாக அளித்த தகவலை தொடர்ந்து ஆய்வுக்குழுவினர் பிற்கால பாண்டியர்களின் 5 கல்வெட்டுகளை கண்டுபிடித்து படி எடுத்தனர்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது: கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர் அரும்பொற்கூற்றத்தைசேர்ந்த மாஞ்சிலான மானமாணிக்கநல்லூர் எனவும், இக்கோயில் இறைவன் பெயர் திருவரகரீஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாஞ்சில் எனும் ஊர்பெயர் தற்போது மாஞ்சூர் என மாறியுள்ளது. மாஞ்சில் எனும் ஒரு மூலிகை தாவரத்தின் பெயரால் இவ்வூர் அமைந்துள்ளது. சடைமுடி போன்று காணப்படும் . இதன் வேரிலிருந்து நறுமணத் தைலம் தயாரித்து முற்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இரண்டு கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தையும், மற்ற இரண்டும் முறையே சடையவர்மன் சீவல்லவன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலத்தையும் சேர்ந்தவை. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு ஆகும்.

சுற்றுச் சுவர்களுடன் கூடிய சிறிய அளவிலான இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் இருந்துள்ளது. தற்போது இவை அழிந்தநிலையில் உள்ளன. சோழர் கால அமைப்பில் உள்ள இக்கோயில் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

கி.பி.1268இல் மாறவர்மன் குலசேகரப்பாண்டியனின் முதலாம் ஆட்சியாண்டில் திருநுந்தாவிளக்கு ஏற்றுவதற்காகவும், முப்பது வட்டத்து சிவப்பிராமணர் உபயத்துக்காகவும் பஞ்சசலான 1 அச்சு ஒன்பதை பொன்னம்பலக் கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன் தானமாக வழங்கியுள்ளார். பஞ்சசலான 1 அச்சு என்பது தென்பாண்டி நாட்டில் வழக்கில் இருந்த ஐந்து புள்ளியிட்ட அச்சுடன் கூடிய பழைய பொற்காசு. முப்பது வட்டத்து சிவப்பிராமணர் கோயிலில் முறைவைத்து பூஜை செய்பவர்கள் எனத் தெரிகிறது.

இதே மன்னரின் 15ஆம் ஆட்சியாண்டான கி.பி.1283இல் சோலைஅரசு தில்லைநாயகன் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்காக கட்டிகுடியில் வரி நீக்கப்பட்ட ஒரு நிலத்தையும், அரையன் பட்டாலகன் என்பவர் ஒத்தி வைத்த நிலத்தின் மூலம் கிடைத்த பொன் எட்டரை, அரைக் கழஞ்செய், நாலு மஞ்சாடி, மூன்று மா, பழங்காசு இரண்டு, ஐந்து கலம் நெல் ஆகியவற்றையும் தானமாக வழங்கியுள்ளார். கட்டிகுடி இவ்வூரிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

கி.பி.1296 இல், மாறவர்மன் விக்கிரமபாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டில் இவ்வூர் பட்டாலகன் சுந்தரதோளன் ஆன களபாளராயன் கோயிலில் திருநுந்தாவிளக்கு ஏற்ற வரியில்லா நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார்.

கி.பி.1300இல் சடையவர்மன் சீவல்லவன் தனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் இவ்வூரில் தேவதானமாகக் கொடுத்த இடத்துக்கு கிடைக்கும் கடமை, அந்தராயம், வினியோகம் ஆகிய வரிகளைப் பெற்று கோயிலில் அமுதுபடி உள்ளிட்ட நிமந்தங்களுக்கு பயன்படுத்த ஊராற்கு ஓலை வழங்கியுள்ளார்.

கல்வெட்டுகளில் இவ்வூரைச் சேர்ந்த தென்னவன் முதலி நாட்டு மூவேந்த வேளான், சோலைஅரசு தில்லைநாயகன், பட்டாலகன் சுந்தர தோளன் ஆன களபாளராயன், பொன்னம்பல கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன், அரையன் பட்டாலகன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.

அப்பி வெட்டி, விரால புரளி ஆகிய நிலத்தின் பெயர்களும், பொன் எட்டரை, கழஞ்செய், மஞ்சாடி, மா ஆகிய தங்கத்தின் நிறுத்தல் அளவுகளும் முந்திரிகை, முக்காணி, மாவரை ஆகிய நிலஅளவுகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com