எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 2…

முன்னுரை:-

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா> மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

கடந்த வார தொடர்ச்சி….பாகம் – 2

பயணத்தின்போது பல்வேறு நாடுகளினூடாக் கடந்து சென்றதாகச் சொன்னீர்கள். ஒவ்வொரு நாட்டு அதிகாரிகளின் அணுகுமுறையும், அந்நாட்டு மக்களின் வரவேற்பும் எவ்வாறு இருந்தது.??

ஈராண், துருக்கி, சிரியா, லெபணன் என எங்கும் மக்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. இந்த நாடுகளின் பாலஸ்தீன பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனை என்பதான உணர்வு தான் மேலோங்கியிருந்தது. பெண்கள், குழந்தைகள் என பெரும் திரளான மக்கள் தெருக்களில் திரண்டு எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நாட்டு அரசுகளும் எங்களை தங்களின் விருந்தினர்களாகவே நடத்தினார்கள். மிகவும் அன்பான உபசரிப்பு எங்களுக்கு வழிநெடுகிலும் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது, இது தான் அவர்கள் பாலஸ்தீனத்தின் பால் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு.

இப்பயணக்குழுவில் யார் யார் இடம்பெற்றிருந்தார்கள்?? முக்கிய பிரபலங்கள் யார்?

 இந்த பயணக்குழுவில் பல விதமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது ஒரு பெரும் வாழ்வியல் அனுபவமாகவே அமைந்தது. மெக்சசே விருது பெற்ற சந்தீப் பாண்டே, தெகல்காவின் முதன்மை ஆசிரியர் அஜித் சாகி, வகுப்புவாதத்தை எதிர்த்து காத்திரமாக இயங்கிவரும் சுரேஷ் கைர்நார் என ஏராளமான நபர்களுடன் 40 நாட்களை உரையாடிபடிக் களிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இவர்ளை எல்லாம் தில்லியில் சந்திப்பதே கடினம் ஆனால் இவர்களுடன் தினமும் பல மணி நேரம் விவாதங்கள், சர்ச்சைகள் என ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிந்தது.

உங்கள் பயணத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத நினைவுகளையும் நெகிழ வைத்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியுமா??

இந்த பயணம் முழுவதுமே மறக்க முடியாத நினைவுகள் தான். இதன் ஒவ்வொரு கணமும் விசித்திரமான அனுபவங்கள் நிறைந்தது. அந்த அனுபவங்களை நான் விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன், விரைவில் அது நூல் வடிவத்தில் வெளிவரவிருக்கிறது. முதலில் எங்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்தது, அதன் பின் பாகிஸ்தான் விசா வழங்கிய நிலையில் இந்திய அரசு வாகாவில் எல்லையை கடக்க அனுமதி வழங்கவில்லை. அந்த சூழ்நிலையில் வாகா எல்லையில் நாங்கள் நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. ராணுவம் சூழ நாங்கள் வாகாவின் இந்த எல்லையில் போராட்டத்தை நடத்திய அதே நேரம், எல்லையின் மறுபுறம் பாகிஸ்தானில் எங்களை வரவேற்க அன்று காலை முதல் காத்திருந்த நண்பர்கள் அங்கு ஆர்பாட்டம் நடத்தினர். எல்லையின் இருபுறங்களின் நடந்த போராட்டம் சர்வதேச செய்தியாக மாறியது. அதனை அடுத்து காசாவுக்கு செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சலாம் என்கிற கப்பல் கிளம்பிய சில மணி நேரங்களில் இஸ்ரேலின் போர் கப்பல்களும் விமானங்களும் அதனை தொடர்ந்து பறந்து மிரட்டியது தான் இந்த பயணத்தின் அரசியல் விளைவு உச்சமாக வெளிப்பட்ட தருணம். அனைவரையும் நெகிழ வைத்த தருணம்.

பாலஸ்தீன மண்ணில் கால் வைத்தவுடன் உங்கள் மன நிலை எப்படி இருந்தது?? கட்டுரைகள் நூல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக அறிமுகமான காஸாவை நேரில் கண்ட போமு என் வித்தியாசம் உணர்ந்தீர்கள்? காஸாவின் நிலை அப்பொழுது எப்படி இருந்தது??

 பாலஸ்தீன ரஃபாவுக்குள் நுழைந்த பொழுது இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். அங்குள்ள ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாலஸ்தீன அரசு (Palestine Authority) எங்களுக்கு பெரும் வரவேற்பு அளித்து. அதன் பின்பேருந்துகளில் ஏற்றி தங்கும் இடம் நோக்கி அழைத்து சென்றார்கள். இருளில் எதையும் காண இயலவில்லை. அன்றைய இரவு தொடர் உரையாடல்களுடன் நீண்டு சென்றது. அடுத்து நாள் காலை சிற்றுண்டியை வேகமாக முடித்து விட்டு எங்களை பேருந்துகளில் ஏற்றி எங்களின் காசா நிகழ்ச்சி நிரலை தொடங்கினார்கள். பேருந்தின் சக்கரங்கள் நகர தொடங்கியது ஒரு பெரிய அமைதி நிலவியது. திரும்பும் திசையெல்லாம் குண்டு வெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைக்கழகங்கள் துறை கட்டிடங்கள், ஊனமான சிறுவர்கள், பெரியவர்கள், குழந்தைகளை சுமந்து உணவு பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார் – இவை எல்லாம் படித்து அறிந்தபோது ஏற்படுத்திய உணர்வுகள் வேறு ஆனால் ஒரு யுத்தபூமியை நேரில் காண்பதென்பது முற்றிலும் வேறான ஒரு மனம் சார் வேதியியல். அறுபது ஆண்டுகள் தாக்குதல்களை சந்தித்த நிலப்பரப்பு என்பது அதனை காணும் போதே தழும்பேறித்  தெரிந்தது.என் அன்றைய தினம் முழுவதும் அழுகையும் விசும்பல்களுடன் தான் கழிந்தது. கண்ணீரை அடக்க முடியவில்லை. ஹமாஸின் ஒரு அதிகாரி என் தோள்பட்டையை தட்டிக் கொடுத்து நன்றாக மனம் விட்டு அழுங்கள், காசா வருபவர்கள் எல்லாம் இப்படித்தான் அழுவார்கள். நீங்கள் பார்க்கும் இந்த காட்சிகளை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள் என்றார்.

காசாவின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளுக்கும் நாங்கள் சென்றோம். அல் ஷத்தி, புரேஜி, தேர் அல் பலாஹ், மகசப், ரஃபா, ஜபாலியா, தல் அஸ் சுல்தான் என எல்லா முகாம்களுக்கும் சென்று வந்தோம். (Al Shati, Bureji, Deir al-Balah , Maghaz, Nuseirat , Rafah , Jabalia, Tall as-Sultan). அதன் பின் அல் ஷிபா (Al shifa)மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள யாசர் அராபத சர்வதேச விமான நிலையம் 1998ல் இஸ்ரேலால் முற்றிலும் நாசமாக்கப்பட்டது, அது மூதல் அங்கு நிர்மானப் பணிகள் நடைபெறவில்லை. உலக தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு தீவை போல் தான் காசா காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனை கடல், நிலம், ஆகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5கிமி நில தொடர்பு மட்டுமே இந்த உலகத்துடன் உரையாட ஒரே பாதை. இருப்பினும் எகிப்து அதிபர் முபாரக் கடந்த  காலங்களில் அமெரிக்கா-இஸ்ரேலின் கை பாவையாக இருந்த்தால் காசாவுக்கு இந்த பாதையும் கூட முற்றாக ஒரு தடைதான். பொருளாதார தடை, வர்த்தக தடை, மருத்துவத்திற்கு காசாவை விட்டு வெளியே வர இயலாது, உயர் படிப்புக்கு வர இயலாது, வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே வர இயலாது என உலகில் உள்ள அத்தனை தடைகளும் காசாவில், மேற்கு கரை என எங்கும் அமலில் உள்ளது. காசாவை பொருத்தவரை அதன் 350 சதுர கிமீ நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்த வெளி சிறைச்சாலைதான், போதா குறைக்கு இஸ்ரேல் அவர்களின் வான்மீது அனுப்பும் குண்டுகள் இலவச இணைப்புதான். இஸ்ரேலுடனான 70கிமீ எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கிமீ தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடாத திறந்த வெளி (Buffer Zone). இந்த நிலபரப்பு விவசாயத்திற்கும், தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மிச்சமுள்ள இடத்தில் தான் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது ஒரு சதுர கிமீக்கு 4118 பேர். இது தான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. காசாவில் வாழும் மக்களில் 80% பேர் ஏழைகள், நிவாரணங்களை நம்பி வாழ்பவர்கள்.

பயணம் இன்னும்  தொடரும்