வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்புவோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக அதிக அளவில் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். அதுவும் பண்டிகை காலங்கலாக இருந்தால் புது ஆடைகளும், இதர பொருட்களும் அதிகமாக கொண்டு வருவது வழக்கம். அதில் பல பயணிகள் தங்களின் பெயர் மற்றும் முகவரிகளை தெளிவாக அடையாளம் காணும் வகையில் எழுதி வைப்பார்கள். ஆனால் எவ்வாறு எழுதினாலும் நம்முடைய பொருட்களின் மேல் ஒட்டப்படும் BAGGAGE TAG எனும் சீட்டே மிகவும் முக்கியமானதும், அதை வைத்துதான் விமான நிறுவனங்கள் பயணிகள் கொண்டு வரும் பொருட்களை அடையாளப்படுத்துவார்கள். ஆனால் நம்மில் ஏராளமானோர் அதை மொருட்படுத்துவதும் இல்லை, சில பயணிகள் அந்த சீட்டை தூர எறிந்தும் விடுவார்கள்.

ஆனால் விமானம் தரை இறங்கிய பிறகு குடிபுகல் சோதனை முடிந்த உடன் பயணிகள் பெல்டில் சுற்றி வரும் தங்கள் சாமாண்களை BAGGAGE CLAIM TAG உடன் சரி பார்த்து உறுதி செய்த பின்னர் எடுத்த செல்ல வேண்டும். ஆனால் சில நேரங்களில் சாமாண் பெட்டிகள் ஒரே மாதிரி இருப்பதால் பயணிகள் அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்ற நோக்கில் தவறுதலாக வேறு ஒருவரின் பெட்டியை எடுத்து சென்று விடுகிறார்கள். இது போன்ற தவறு நிகழ்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகள் பயணிகள் எடுத்து செல்லும் பெட்டிகள் அந்த பயணிக்கு உரியதா என்பதை BAGGAGE TAG உடன் உறுதி செய்த பின்னர் வெளியே அனுப்பு வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் நடைமுறையில் அதிகாரிகளின் கவனக்குறைவால் சோதனை செய்யாமல் வெளியே அனுப்புவதால் மற்றவரின் பொருட்களை தவறாக எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

சமீபத்தில் துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த பயணி ஒருவர் தன்னுடைய லக்கேஜுக்கு பதிலாக வேறு ஒருவரின் லக்கேஜை எடுத்து சென்று விட்டார். உடனே இதை லக்கேஜை இழந்த பயணி கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் புகார் செய்ததை தொடர்ந்து மறு நாள் தவறுதலாக எடுத்துச் சென்ற நபர் கொடைக்கானல் நகரைச் சார்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு பெரும் சிரமங்களுக்கு இடையில் பொருட்கள் உரிய பயணிகளிடம் சேர்க்கப்பட்டது.

இது போன்ற கவனக்குறைவால் சரியான நேரத்தில் தேவையான பொருட்கள் கிடைக்காமலும், மன உளைச்சலுக்கு ஆளாகுவது மட்டுமின்றி, நேரமும், பொருளாதாரமும் வீண்விரயம் ஆகிறது. ஆக வெளிநாட்டில் இருந்து வரும் சகோதரர்கள் கவனமுடன் தங்களின் உடைமைகளை கையாள்வது அவசியம்.


1 Comment

Comments are closed.