இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.02.2019) நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.64.32 லட்சம்  மதிப்பில் 521 மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக உதவி உபகரணங்களை  வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், தன்னம்பிக்கையை மேம்படுத்தி சமுதாயத்தில் தாழ்வு மனப்பான்மையின்றி வாழ்ந்திட ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல், இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 27,741 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2016-17-ஆம் நிதியாண்டில் 5,747 பயனாளிகளுக்கு ரூ.8.19கோடி மதிப்பிலும், 2017-18-ஆம் நிதியாண்டில் 4,490 பயனாளிகளுக்கு ரூ.6.16 கோடி மதிப்பிலும் பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாரந்திர மக்கள் குறை தீர் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாதவாறு தனி இருக்கை அமைக்கப்பட்டு, அவர்களது கோரிக்கை மனுக்கள் அனைத்தும் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூக  பொறுப்பு நிதியிலிருந்து 521 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64.32 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. இதற்கான பயனாளிகள்  தேர்வு அனைத்தும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.  தேசிய அளவில் வளர்ச்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வுசெய்துள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். பொதுமக்கள்  நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களின் செயல்பாடு குறித்த பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தரமதிப்பீடு செய்து நித்தி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட தர வரிசை படி இராமநாதபுரம் மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. மக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் முதலிடத்திற்கு முன்னேற்றும் வகையில் பணி மேற்கொள்ளப்படும் என பேசினார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை பொது மேலாளர் எஸ்.சுந்தர் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணை பொது மேலாளர் ஏ.கே.கௌதமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.