கீழக்கரையில் நடிகர் விவேக் தலைமையில் மரம் நடும் விழா – செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 06.03.17 திரைப்பட நடிகர் விவேக் தலைமையில் மரம் நடு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜபிதீன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் கலந்து கொண்டு மரம் நடு விழாவினை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ”இராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புக்களுக்கு உரியது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கிராமங்கள் தோறும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க உறுதி மொழி எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது அந்த உறுதி மொழியினை செயல்படுத்தி மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க முன் வர வேண்டும். மேலும் இம்மாவட்டத்தில் பிறந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்த மேதகு டாக்டர் APJ அப்துல் கலாமின் கனவினை நனவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பசுமை அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேசன் நிர்வாகி ஷேக் சலீம், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முனைவர் முஹம்மது ஜஹபர் மற்றும் முஹம்மது சதக் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முன்னதாக முதுகலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நுண்ணியல் துறை தலைவர் முனைவர் ஆனந்த் நன்றியுரை வழங்கினார். மேலாண்மை துறை தலைவர் முனைவர் விமலி விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் சிறப்பாக செய்திருந்தார். இவ்விழாவிற்கு முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர், கல்லூரியின் தாளாளர் யூசுப் மற்றும் செயலர் சர்மிளா, கல்லூரியின் இயக்குனர்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..