
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ளது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஆரம்ப கல்வி பயின்ற மண்டபம் ஒன்றிய நடுநிலை நம்பர் 1 பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, அன்றைய தினம் அவரின் படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். மேலும் இப்பள்ளியில் ஆய்வகம், கணினி அறை, நூலகம் என பல்வேறு வசதிகளை அரசும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து கொடுத்துள்ளனர்.
மாவட்ட கல்விதுறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் பின்பு புதிய மின் இணைப்பு பெறப்பட்டது, இந்த மின் இணைப்பிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இன்று பள்ளிக்கு வந்திருந்த மின்வாரியதுறை அதிகாரிகள் மின்கட்டணம் செலுத்தாத விபரத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். அதன் பின் மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கம்ப்யூட்டர் மற்றும் மின் விசிறி இயங்காததால் அவதியடைந்தனர். மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு மின் இணைப்பு சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதி படித்த பள்ளிக்கே இந்த நிலையா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.