கீழக்கரை கடற்கரைப் பகுதியில் நிலத்தடி நீரை உரிஞ்சும் கருவேல மரங்கள் அகற்றம்..

கீழக்கரையில் இன்று (03-01-2017) மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக கருவேல மரங்கள் கடற்கரைப் பகுதியில் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டது.  சமீபத்தில் தமிழக அரசு நச்சு மரங்களான கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள மரங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஜனவரி 10ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் தவறும் பட்டசத்தில் நகராட்சி அகற்றி அதற்கான தொகையை தனியாரிடம் இருந்து வசூல் செய்யும் என்ற அறிக்கையை வெளியிட்டு இருந்தது.  அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல் வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அரசாங்க நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களை JCB இயந்திரங்களை வைத்து அகற்றி வந்தனர்.  இன்று கீழக்கரையிலும் கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமையில் கடற்கரை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகிகளான முகைதின் இபுராஹீம் முஹம்மது சாலிஹ் சாலிஹ் ஹீசைன், தீன் இஸ்மாயில், ஹசன் ஃபாயிஸ், பாதுஷா,  அபுபைசல் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருவேல மரங்களின் தன்மை உங்கள் பார்வைக்கு:-
தாவர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என அறிவிக்கப்பட்ட சீமை கருவேலம்(புரோசாபிஸ் ஜூலிபெரா) தென் அமெரிக்கா  நாடுகளிலிருந்து  விருந்தாளியாக நுழைந்து விளை நிலங்களை ஆக்கிரமித்துவிட்டது.  நம் ஊர்களில் வேலிகாத்தான் என்று அழைக்கப்படும் இந்த தாவரம்  ஆராய்ச்சி நிறுவனங்களால் தடை செய்யப்பட்டதாகும். இந்த தாவரத்தால் நிலத்தடி நீர் வற்றிவிடும்.  கால்நடைகளுக்கு  உணவாகும் புல், பூண்டு போன்றவற்றை  கூட வளரவிடுவதில்லை. பல அடி ஆழத்தில்  இருந்து கூட நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது.
தமிழகத்தில் ராமநாதபுரம்,  விருது நகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் வறட்சியாக காணப்படுவதற்கு  இம்மரங்களே மிக முக்கிய காரணம். இந்த நச்சு  மரத்திலிருந்து வெளிவரும்  வெப்பம் உயிரினங்களுக்குஇ குறிப்பாக கால்நடைகளுக்கு மலட்டு தன்மையை  ஏற்படுத்துகிறது. நிலத்தில் நீரே கிடைக்கவில்லை  என்றால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. மக்களின்  வாழ்வாதாரத்தை நேரடியாகவே அழித்து கொண்டிருக்கும் சீமை  கருவேலமரம்  எனப்படும் நச்சுத்தாவரம் குறித்து புதுச்சேரியில் போதிய விழிப்புணர்வு  இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை நாம்  எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தற்போது அபாயத்தை உணர்ந்து நீதிமன்றம் தமிழகத்தில் அந்த நச்சு தாவரத்தை  அழிக்க உத்தரவிட்டுள்ளது. சீமை கருவேல மரங்கள் பரவி  வருவது மேலும் குடிநீர் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல்  நிபுணர்கள். விவசாய பயிர்களை பாதுகாக்க  வேலிகட்டுவதற்கு விருந்தாளியாக  அழைத்து வரப்பட இவை இன்று விஷ விருட்சமாக மாறி மரம், செடி கொடிகளை அண்ட  விடுவதில்லை.
ஆபத்தை உணர்ந்து சீமை கருவேல மரங்களை அகற்ற  போர்க்கால அடிப்படையில் தொண்டு நிறுவனங்கள், இளைஞர் மன்றங்கள், விவசாய  அமைப்புகள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்