உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும் – உலக அமைதி தினம் (International Day of Peace) இன்று (செப்டம்பர் 21).

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து.

மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.

உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில், பல மாநிலங்கள், பல மொழி பேசுபவர்கள் மற்றும் பல மதத்தினர் இருந்தாலும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கைதான், இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது. இதனால் உலக அரங்கில் இந்தியா, தலை நிமிர்ந்து நின்று, மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 – ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது, இந்த அமைதி தினத்தில் நாம் அனைவரும் எண்ணி பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும். வரும்காலங்களில் ஒவ்வொரு நாளுமே, உலக அமைதிநாள்தான் என்ற மனநிறைவோடும், நிம்மதியோடும் கொண்டாட வேண்டும். இதுவே நம்மை வாழவைக்கும் இந்த உலகத்தை, நாம் வாழவைக்கும் முறை. ஓவ்வொரு மனமும் மாறும்போது, உலகமும் மாறும் என்ற நம்பிக்கையோடு நாமும் இந்த அமைதி நாளில் உலக அமைதிக்கு வழிவகுப்போம்.
Source By: Dailyhunt, Newsj
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal