Home செய்திகள் போலி நெல் விதைகளால் உற்பத்தி பாதிப்பு-நெற்கதிருடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீடு..

போலி நெல் விதைகளால் உற்பத்தி பாதிப்பு-நெற்கதிருடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீடு..

by ஆசிரியர்

தாராபுரம் பகுதியில் 200 ஏக்கரில் போலியான விதை நெல்கள் பயிரிடப்பட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் வரை இழப்புஏற்பட்டுள்ளதாக கூறிவிவசாயிகள் திங்களன்று தங்களது நெல்கதிருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர், மாவட்டம் தாராபுரம் பகுதியில் 56 விதை நெல் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள் இயங்கி வருகிறது. இதில் விற்கப்படும் விதை நெல்கள் போலியானதாக உள்ளதாகவும், அத்தகைய நெல்லை பயன்படுத்தியதால் போதுமான விளைச்சல் இல்லையென விவசாயிகள் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விதை நெல் ஆய்வு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு 11 நெல் உற்பத்தி மையங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்பின்னர், மீண்டும் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின்பு மீதமுள்ள உற்பத்தி மையங்கள் மூலம் குளத்துப்பாளையம், சங்கரண்டம்பாளையம், தாளக்கரை, நஞ்சியம்பாளையம், கொளிஞ்சிவாடி, காட்டூர் மற்றும் வீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலத்திற்கு தேவையான நெல் விதைகள் வாங்கி பயிரிடப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு பயிரிடப்பட்ட நெல்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்திருக்க வேண்டும். ஆனால், அவைகளும் போலியான நெல் விதைகள் என்பதால் கதிர்களில் நெல்மணிகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறது.

இதனால், அறுவடை பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, போலி விதைகளால், சுமார் 60 ஆயிரம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி வரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து போலி நெல்கள் விற்பனை செய்யும் விதை மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த விற்பனை மையங்களை மூடிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!