Home செய்திகள் கமுதியில் 300 பவுன் நகை வழிப்பறி திடீர் திருப்பம் – வீடியோ..

கமுதியில் 300 பவுன் நகை வழிப்பறி திடீர் திருப்பம் – வீடியோ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பட்டப்பகலில் 300 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டதாக வெளியான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயக்காரத் தெருவைச் சேர்ந்தவர் குரு பூவலிங்கம். இவரது மனைவி உமா, 40. இவரது சகோதரியின் கணவர் பூபதி ராஜா. சினிமா பைனான்சியரான பூபதி ராஜா, தனது மனைவியின் தங்கை உமாவின் பொறுப்பில் 300 பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். நகைகளை கமுதியில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்தார் உமா.

இந்நிலையில், பூபதிராஜாவின் மகன் ‌பழனிகுமாரின் திருமணம் அருப்புக்கோட்டையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகைகளை பூபதி ராஜா கேட்க, அவற்றை எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார் உமா. வங்கிக்கு சென்ற அவர், மேட்டுத் தெருவில் உள்ள வங்கியின் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வந்த போது வழிப்பறி செய்யப்பட்டதாக கூறியுள்ளார். தனது வீட்டை உமா நெருங்கிய போது முகமூடி அணிந்த ஒருவர் அவர் முன் ஒரு பொருளை தூக்கிப் போட்டு கவனத்தை திசை திருப்பியதாக தெரிவித்தார். ஒரு நிமிடம் அதிர்ந்த உமா வீசப்பட்டது என்னவென்று பார்க்க முயன்றார். அப்போது அவரது கையில் இருந்த நகைப் பையை அந்த நபர் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மற்ற இருவருடன் தப்பிச் சென்றதாக கூறினார்.

கதறிய வாறே கமுதி காவல் நிலையத்திற்கு சென்ற உமா, நகை வழிப்பறி குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று துரித விசாரணை நடத்தினர். உமாவிடம் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் விசாரித்தார். சம்பவ இடம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் கொள்ளையரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பறி போனதாக சொல்லப்படும் நகைகளின் மதிப்பு சுமார் 45 லட்சம் ரூபாய் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்துள்ள வழிப்பறி நடந்ததாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 300 பவுன் நகை வழிபறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நகைகள் வழிபறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது சகோதரியின் கணவர் கொடுத்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக உமா விற்றுள்ளார். நகைகளை தற்போது அவர் கேட்கவே, வழிப்பறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியுள்ளார். இரிடியம் கலசம் விற்பனை கும்பலிடம் ரூ.25 லட்சம் வரை உமா கொடுத்துள்ளார். வங்கிகளில் உமா அடகு வைத்த நகை மற்றும் இதர சொத்து ஆவணங்கள் குறித்து தென் மண்டல ஐஜி, ராமநாதபுரம் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் வழிகாட்டல் படி இன்ஸ்பெக்டர்கள் தலைமை 6 தனிப்படை விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் என டி எஸ் பி சண்முகசுந்தரம் கூறினார்.இது குறித்து கமுதி போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

—-//————————//———————-//——-

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!