கீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..

கீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் இஸ்லாமிய மக்களும் நாய்களின் தொந்தரவால் அச்சமடைந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கீழக்கரை நகரில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களையும் மூத்த குடி மக்களையும் நாய்கள் கடித்து குதறியுள்ளது. கடந்த ஆண்டு சாலை தெருவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் நாய் கடித்து பலியானான். இந்நிலையில் மீண்டும் உருவெடுத்துள்ள நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், பொதுநல சங்கத்தினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது நேற்று இரவு முதல் தஞ்சாவூரை சேர்ந்த அன்னை கம்சளை தொண்டு நிறுவனம் மூலம் கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு நடக்க இருப்பதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவில் மட்டும் 46 நாய்கள் பிடிபட்டுள்ளதாக தெரிகிறது. கீழக்கரை பொதுமக்கள் தங்கள் தெரு பகுதியில் நாய்கள் தொந்திரவு இருந்தால் உடனடியாக நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் ஹாஜா ராவுத்தரை கீழ் காணும் அழைப்பு பேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

   சக்தி : 9840909198                         

ஹாஜா ராவுத்தர் : 9994046329

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.